உன்னைப் போல் பிற உயிரையும் நேசி

கோவை ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் வருடம் தோறும் அருள் நிறைந்த ஆன்மீக உற்சவமான ‘எப்போ வருவாரோ’ நிகழ்வினை ஜனவரி 1 முதல் நடத்தி வருகிறது. பத்து நாட்கள் நடக்கும் இந்நிகழ்வின் நான்காம் நாள் சொற்பொழிவில் ஸ்ரீரமண பாரதி திருமூலர் குறித்து சொற்பொழிவாற்றினார். ஆர்.எஸ்.புரம் கிக்கானி மேல்நிலைப்பள்ளி சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியத்தில் ஜனவரி 2, 2020, வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வில் ‘ நாம் வாழும் வாழ்கையில் ஒரு குறிக்கோள் ஒன்று உண்டு. அது இறைவனின் திருவடிகளை அடைவது என்கிறார் திருமூலர். உயிர் உள்ளது, உயிர் உலகில் உள்ளது, நம்மைப் போலவே பல உயிர்களும் உண்டு. உயிருக்கும் உலகுக்கும் தொடர்பு உண்டு. அதுவே பிரம்மம், பிரம்மமே இறைவன் என்கிறார் திருமூலர். இது குறித்து பல மகான்கள் நமக்கு தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தார்கள். அந்த மகான்களை தினந்தோறும் பின்பற்றி வாழ்க்கைப் பாதையில் நடக்க வேண்டும். சைவம் மற்றும் வைணவமும் மகோன்னதமாக இணைந்த மாதம் மார்கழி. இறைவனின் நிறைவுப் பகுதி மார்கழி மாதம் என்று சொல்லலாம்.

கல்வி என்றால் தன்னை அறிந்து கொள்ளக்கூடியதாக பயன்பட வேண்டும். இதனையே திருமூலர் தன்னை அறிது கொண்டால் உனக்கு எந்தக் கேடும் வாழ்க்கையில் இல்லை. ஆனால் தன்னை அறிந்து கொள்ள எந்த முயற்சியும், சிந்தனையும் இல்லை. அதனால் தானே கெடுகின்றான் என்கிறார் திருமூலர். இப்படி மூவாயிரம் பாடல்களைக் கொடுத்துள்ளார் திருமூலர்.

நம் நாட்டில் மக்கள் தொகைக்கு ஏற்ப காவல் நிலையங்கள் குறைவு. குற்றங்களும் குறைவு எனலாம். காரணம் பாரத தேசத்து மக்கள் இயற்கையிலேயே அறத்தின்பால் வழிநடப்பவர்கள், வாழ்க்கைமுறையும் அமைந்திருக்கிறது. அறத்தினை ஆழ்வார்களும், நாயன்மார்கள், ஞானிகளும், மகான்களும் ஆயிரம் ஆண்டுகளாக பாதை அமைத்து வழிநடத்தி வந்துள்ளார்கள்.

தர்மம் என்றால் அது வேதம் தான். வேதத்தை விட்டால் அறமில்லை. வேதத்திலேயே அனைத்து விஷயங்களும் உள்ளது என்கிறார் திருமூலர். இறைவனுக்குப் பெயர் பிரம்மம் என்கிறது வேதம். இறைவன் நம்மில், உலகின் அனைத்து இடங்களிலும் இறைவன் நிறைந்தும், அனைத்துச் செயல்பாடும் இறைவனே. நம் நாட்டில் ஆன்மீகம் வேறு, லெளகீகம் வேறு என்பதே கிடையாது. இரண்டும் இணைந்ததே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மற்றும் நம் பாரத தேசம் என்பது குமரி முதல் இமயம் வரை ஒரே பண்பாடு ஒரே தேசம் இதையே இளங்கோவடிகளும், வள்ளுவரும், திருமூலரும், திருஞானசம்பந்தரும், தியாகராஜ சுவாமிகளும் கூறியிருக்கிறார்கள். ஒரே தேசம் என்ற சிந்தினை நமக்கு வேண்டும் என்று பேசினார்.