“சிறுதுளி அமைப்பின் ‘காடுவளர்ப்பு திட்டம் துவக்க விழா”

கோவையின் நீராதாரங்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாத்து பராமரிக்கும் பணியை சிறப்பாக தொடர்ந்து செய்து வருகின்றது சிறுதுளி அமைப்பு. கோவையின் சுற்றுச்சூழலை பாதுகாத்து மேம்படுத்தும் பொருட்டு சிறுதுளி அமைப்பு கோவையின் பல்வேறு பகுதிகளில் மரங்களை நட்டு பராமரித்து வருகின்றது. இதன் தொடர் முயற்சியாக தென்னிந்திய ரயில்வேயுடன் இணைந்து சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் காடுவளர்ப்பு திட்டம் துவங்கப்பட்டது. இந்நிகழ்வில் முதல்கட்டமாக 5,000 மரக்கன்றுகள் நடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு தென்னிந்திய ரயில்வேயின் சேலம் மண்டலத்தின் டிவிஷ்னல் ரயில்வே மேலாளர் யு.சுப்பாராவ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஹெச்.சி.எல் ஃபபுண்டேஷனின் மேலாளர் சாந்தனு பாசு கலந்து கொண்டார். இந்நிகழ்வில் சிறுதுளியின் நிர்வாக அறங்காவலர் வனிதா மேகன் பேசுகையில் ‘’வெளிப்புற நுரையீரல்களாக செயல்படும் மரங்கள் நன்றாக இருந்தால் தான் மனிதர்களின் நுரையீரல் தடையின்றி செயல்படும். நகரங்களிலும் மியாவாக்கி முறையில் கோவை நகரத்தில் காடுகளை வளர்க்கும் முயற்சியை சிறுதுளி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக இது போன்ற 15 திட்டங்களில் 1.5 லட்சம் மரங்களை நட்டுள்ளோம்.

ஆறு, குளங்கள் மாசடைவதை தவிர்க்கும் பொறுட்டு விநாயகர் சதுர்த்தியின் போது பசுமைப் பிள்ளையார் என்று களிமன்னினால் செய்யப்பட்ட விநாயகர் சிலையில் விதை வைத்து மக்களுக்கு வழங்கினோம். அந்த களிமண் பிள்ளையாரினை வீட்டிலேயே தொட்டியில் கரைத்து அந்த விதையில் இருந்து மரக்கன்றுகளை வளர்த்தோம். அப்படி வளர்க்கப்பட்ட மரக்கன்றுகளையும் இங்கு நட்டுள்ளோம். இங்கு 30 வகையான பாரம்பரிய நாட்டு மரங்களை நட்டுள்ளோம். எங்களது இந்தத் திட்டத்திக்கு தென்னிந்திய ரயில்வே இடமளித்து முழு ஒத்துழைப்பும் நல்கியது. ஹெச்.சி.எல் ஃபவுண்டேஷனும் இத்திட்டத்துக்கு நிதி அளித்து உதவியதற்கு நன்றிகள் என்று பேசினார்.

டிவிஷ்னல் ரயில்வே மேலாளர் யு.சுப்பாராவ் பேசுகையில், ‘’ 3 ஏக்கர் பரப்பளவில் 5000 மரக்கன்றுகளை முதல்கட்டமாக நட்டுள்ளோம். தென்னக ரயில்வே இது போன்ற திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பைப் கொடுக்கும். ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் மரங்கள் வளர்க்கும் பணியை தொடர்ந்து செயல்படுத்துவோம். மரங்களை நடுவது மட்டுமல்லாமல் அதற்குத் தேவையான நீர்ப்பாசன மற்றும் பராமரிப்பு வசதிகளை சிறுதுளி சிறப்பாக செய்துள்ளது என்று பேசினார்.

ஹெச்.சி.எல் ஃபவுண்டேஷனின் மேலாளர் சாந்தனு பாசு பேசுகையில் ‘’சிறிய இடத்தில் வளர்க்கப்படும் மரங்கள் கூட சுற்றுப்புறச் சூழலில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். குளங்களை தூர்வாருதல், மரங்களை நடுவது என சுற்றுப்புறச்சூழலை பாதுகாத்து மேம்படுத்தும் முயற்சியில் எங்களது நிறுவனம் தொடர்ந்து செயல்படும். ரயில்வே துறை இடமளித்தால் இது போன்ற திட்டங்களை மேலும் செயல்படுத்த எங்களது நிறுவனம் தயாராக உள்ளது என்று பேசினார்.

சிறுதுளியின் உறுப்பினர் சந்திரசேகரன் நன்றியுரை நல்கினார். விழாவில் ரயில்வே ஊழியர்கள், சிறுதுளியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.