நவம்பர் 30 இல் மாணவர்களுக்கான மனநல மேம்பாட்டு கருத்தரங்கு

மனநலம் மற்றும் நரம்பு அறிவியலுக்கான பாக்யலஷ்மி ஆறுமுகம் இன்ஸ்டிடியூட் (BIMHANS- பிமான்ஸ்), அமெரிக்காவின் சாஷி இளங்கோவன் அறக்கட்டளை ஆதரவுடன் துவக்கப்பட்ட ஒரு லாப நோக்கற்ற நிறுவனமாகும். உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடையே மன நலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கல்வியிலும், சமூக வாழ்விலும் சிறந்து விளங்கிடத் தேவையான பயிற்சிகள் அளிப்பதே இதன் நோக்கமாகும்.

தற்போது கோவையில் 5 பள்ளிகளில் 1300 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. உளவியல் முதுகலைப் பட்ட வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி திட்டம் அளிப்பதற்காக ஸ்டேட்டன் ஐலண்ட் பல்கலைக்கழக மருத்துவமனையுடன் பிமான்ஸ் இணைந்து செயல்படுகிறது. மேலும், கோவையில் ஓர் அதிநவீன மனநல மருத்துவமனை அமைத்திடவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

தற்போது, பிமான்ஸ் மற்றும் அமெக்காவின் ஸ்டேட்டன் ஐலண்ட் பல்கலைக்கழக மருத்துவமனையும் இணைந்து பள்ளி மாணவர்களிடையே மனநல மேம்பாடு குறித்தான கருத்தரங்கினை நடத்துகிறது. இந்நிகழ்ச்சி கோவை சின்னியம்பாளையம் அவினாசி ரோட்டில் உள்ள ஹோட்டல் கோகுலம் பார்க்-ல் நவம்பர் 30-ம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் கேஎம்சிஹெச் தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி முதன்மை விருந்தினராக கலந்துகொள்கிறார். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை டீன் டாக்டர் அசோகன், கற்பகம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த டீன் டாக்டர் அன்பு அறவழி மற்றும் கேஎம்சிஹெச் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் டீன் டாக்டர் குமரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.

இக்கருத்தரங்கில் முதன்முறையாக அமெக்காவில் இருந்து மனநல மருத்துவ நிபுணர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக உலகளாவிய பார்வையில் மனநலம் குறித்தான பிரச்சினைகளை விவாதிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டேட்டன் ஐலண்ட் பல்கலைக்கழக மருத்துவமனை மனோவியல் துறையைச் சேர்ந்த முதுகலைக் கல்வி இயக்குனர் டாக்டர் டிமோதி சலிவன், குழந்தைகள் மற்றும் வயதுவந்தோர் மனநலத் துறை இயக்குனர் டாக்டர் பெங் பேங், நியூயார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சி பேராசிரியர் டாக்டர் பெர்ட்ராண்ட் வின்ஸ்பர்க், சென்னையில் உள்ள தி பன்யன் அமைப்பின் இயக்குனர் டாக்டர் கிஷோர் குமார் ஆகியோர் இக்கருத்தரங்கில் நேரடியாக கலந்துகொண்டு உரை நிகழ்த்துகின்றனர்.

மேலும், இக்கருத்தரங்கில் மருத்துவக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த உளவியல் துறை பேராசிரியர்கள் பங்கேற்கின்றனர். தற்போது மருத்துவ சேவையாற்றி வரும் உளவியல் சிகிச்சை நிபுணர்களும் கலந்துகொள்கின்றனர். இக்கருத்தரங்கில் கலந்துகொள்ள விரும்புவோர்  98434-79608 என்ற மொபைல் எண்ணில் அழைத்து முன்பதிவு செய்துகொள்ளலாம். முன்பதிவு இலவசம்.