இந்தியா வரும் வெளிநாட்டு மாணவர்கள்  அதிகரித்துள்ளனர்

பொதுவாக நம் நாட்டில் இருந்து மேற்படிப்பிற்கு வெளிநாடு செல்வது என்பது ஒரு கௌரவமான நிகழ்வாகவே கருதுகின்றனர். ஆனால், தற்பொழுது இதற்கு மாறாக தற்பொழுது வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு மேற்படிப்பிற்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ”உலகம் முழுவதிலும் 164 நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வெளிநாட்டு மாணவர்கள் வருகின்றனர். இதில் அதிக அளவிலான மாணவர்கள் நேபாளத்தில் இருந்து படிப்புக்காக இந்தியா வருகின்றனர். அடுத்தபடியாக வெளிநாட்டு மாணவர்கள் இந்தியா வரும் பட்டியலில் ஆப்கானிஸ்தான் இடம் பிடித்துள்ளது.

இதிலும் மாணவிகளை விட மாணவர்களே அதிகளவில் இந்தியாவுக்குப் படிக்க வருகின்றனர். இதில் இவர்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் பி.டெக் படிப்பைத் தேர்ந்தெடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இரண்டாவதாக பிபிஏ படிப்பை மாணவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.

கடந்த ஆண்டில் படிக்க வந்த வெளிநாட்டவரின் எண்ணிக்கை 46,144 ஆக இருந்துள்ளது. இதுவே 2018- 19 ஆம் கல்வியாண்டில் 47,427 பேர் மேற்படிப்புக்காக இந்தியா வந்துள்ளனர். வெளிநாட்டினர் கர்நாடக மாநிலத்துக்கே அதிக அளவில் (10,023) படிக்க வந்துள்ளனர். இது மகாராஷ்டிரத்தில் 5,003 பேராகவும் பஞ்சாப்பில் 4,533 பேராகவும் உள்ளது. தமிழகத்தில் 4,101 வெளிநாட்டு மாணவர்கள் படிக்கின்றனர்.

நேபாளத்தில் இருந்து 26.88 சதவீத மாணவர்கள் இந்தியாவில் படிக்கின்றனர். அமெரிக்காவில் இருந்து 3.2% பேரும் ஈரானில் இருந்து 2.38% மாணவர்களும் மேற்படிப்புக்காக இந்தியா வந்துள்ளனர்”.