சிரிப்பும் சிறந்த மருத்துவமே!

சிரிப்பு மனிதனை மனிதனாக வைத்திருக்க உதவுகிறது, அதுமட்டுமல்லாமல் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கும் சிரிப்பு ஒரு சிறந்த மற்றும் விரைவான தீர்வாகும். உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை, மூட்டு வலி, மனச்சோர்வு, படபடப்பு, தூக்கமின்மை போன்ற நாள்பட்ட உடல் பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல மருந்தாக அமைகிறது.

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களின், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சிரிப்பு யோகா பயிலரங்கத்தில் உலக சிரிப்பு யோகா இயக்கத்தின் நிறுவனரும், உலகப் புகழ் பெற்ற சிரிப்பு குருவுமான மதன் கட்டாரியா கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் சுமார் 500 க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

நம்முடைய வெற்றி, தோல்வியைத் தீர்மானிப்பதில் உணர்வுகளின் பங்கு மிக முக்கியமானது என்றும், நம்மை மகிழ்ச்சியின் உச்சத்திற்கும், மனச்சோர்வுக்கும் எடுத்துச் செல்ல வல்லது நம் உணர்வுகள் என்றும் மதன் கட்டாரியா பங்கேற்பாளர்களுக்கு வலியுறுத்தினார்.

வாழ்வின் வெற்றியானது, 20% அறிவின் பங்கீடு, 80% உணர்வுகளின் பங்கீடு என்று கூறிய அவர், நம் அன்றாட வாழ்வில் சிரிப்பு யோகாவைப் பயில்வது எப்படி என்றும் மாணவர்கள், மற்றும் ஆசிரியர்களுக்கு உணர்த்தினார்.

நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பிரபலமாக உள்ள இந்த சிரிப்பு யோகா, குழுவாக சேர்ந்து செய்யக்கூடியதாகும். யோகாவின் ஒரு பகுதியான பிராணாயாம சுவாசப் பயிற்சிகளுடன் சேர்த்து இது ஆரம்பிக்கப்படுகிறது. பின்னர் கட்டாய சிரிப்புகளில் துவங்கி குழுவினரிடையே  எளிதில் தொற்றிக்கொள்ளக்கூடிய சிரிப்பாக மாறுகிறது. விஞ்ஞானப் பூர்வமாக, நமது உடலால், இயற்கையாக நாம் சிரிக்கும் சிரிப்பிற்கும், செயற்கையாக நாம் சிரிக்கும் சிரிப்பிற்கும் வித்தியாசம் காண முடியாது என்பதே சிரிப்பு யோகாவின் அடிப்படை ஆகும். எனவே இயற்கையான சிரிப்பினால் கிடைக்கும் அத்தனை பலன்களையும் இதன் மூலம் பெற முடியும்.

உலகில் ஆயிரக்கணக்கான இலவச சிரிப்பு யோகா சங்கங்கள், மக்கள் கூட்டமாக சேர்ந்து சிரிப்பதற்காக இயங்கி வருகின்றன. இது தவிர, அலுவலகங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், முதியோர் மையங்கள், பள்ளி, கல்லூரிகள், சிறைகள், மருத்துவமனைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான மையங்கள் போன்றவற்றிலும் சிரிப்பு யோகா பயிற்றுவிக்கப்படுகின்றது.

இது மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கும் சிரிப்பு ஒரு சிறந்த மற்றும் விரைவான தீர்வாகும். உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை, மூட்டு வலி, மனச்சோர்வு, படபடப்பு, தூக்கமின்மை போன்ற நாள்பட்ட உடல் பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல மருந்தாக அமைகிறது. உடல் மற்றும் மூளைக்கு அதிக இரத்த ஓட்டத்தை அளிப்பதன் மூலம்,  சிரிப்பு யோகப் பயிற்சிகள் உங்களை ஆரோக்கியமாகவும் புத்துணர்வாகவும் வைக்கின்றன.