மேடையில் பேசுவதற்கு ‘எடுத்தல்’, ‘தொடுத்தல்’, ‘முடித்தல்’ அவசியம்

மேட்டுப்பாளையத்தை அடுத்து கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில், மேடையில் பேசுவது எப்படி? என்பது குறித்த பயிலரங்கம் நடைபெற்றது. இப்பயிலரங்கினைப் பள்ளிச் செயலர் தமிழ்ச் செம்மல் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் நடத்தினார்.

மாணவ மாணவியரும், ஆசிரியர்களும் கலந்து கொண்ட இப்பயிலரங்கில் உரையாற்றிய சிந்தனைக் கவிஞர் கவிதாசன், மேடையில் பேசுவதற்கு மாணவ மாணவியர் தயக்கம் காட்டுகின்றனர். சரியான தயாரிப்பு இருந்தால் தயக்கம் விலகிவிடும். மேடைப் பேச்சாளராவது மிகவும் எளியதுதான். அதற்குப் பயிற்சியும், முயற்சியும் தொடர்ச்சியாக இருக்க வேண்டும். மாணவர்கள், தாங்கள் அன்றாடம் படிக்கின்ற, கேட்கின்ற செய்திகளையெல்லாம் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றை சரியான நேரத்தில் பயன்படுத்தினால், மேடைப்பேச்சு சிறப்பாக இருக்கும். சிறந்த மேடைப்பேச்சாளர்களின் உரைகளைக் கேட்டும் நமது பேச்சுத் திறமையை வளர்த்துக் கொள்ளலாம். மேடையில் பேசுகின்ற போது மூன்று முக்கிய நிலைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவை, ‘எடுத்தல்’, ‘தொடுத்தல்’, ‘முடித்தல்’ என்பனவாகும்.

பேச்சினைச் சிறந்த முறையில் தொடங்குதல் ‘எடுத்தல்’ எனப்படும். தலைப்பிற்கு ஏற்ப, பழமொழிகளையோ, பாரதியார், பாரதிதாசன் போன்ற கவிஞர்களின் பாடல் வரிகளையோ, பொன்மொழிகளையோ, குறட்பாக்களையோ அல்லது ஏதாவது ஒரு நிகழ்வினையோ கூறி பேச்சினைத் தொடங்க வேண்டும். பேசத் தொடங்கிய ஒரு மணித்துளிக்குள் கைத்தட்டல்களைப் பெற்றுவிட்டால், நமது பேச்சு பார்வையாளர்களைச் சென்றடைந்துவிட்டது என்று பொருள்.

அடுத்ததாக, சிறந்த முறையில் செய்திகளைக் கோர்வையாக்கி, இடையிடையே மேற்கோள்களையோ, கதையையோ, நகைச்சுவையையோ இணைத்துப் பேசுவது ‘தொடுத்தல்’ எனப்படும். நாம் பேசுகின்ற கருத்து கேட்கின்றவர்களின் வயதிற்கு ஏற்ப அமைத்துக் கொள்கின்ற திறமை, தொடர்ந்து மேடையில் பேசப் பேச பழக்கத்திற்கு வரும். பள்ளிகளில் நடைபெறுகின்ற பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ மாணவியர்கள், தலைப்பிற்கு ஏற்ப தயார் செய்து கொள்வதுடன், ஏற்ற இரக்கத்துடன் கருத்துக்களைக் கூறினால், நடுவர்களையும் பார்வையாளர்களையும் கவர முடியும். அதற்குத் தொடர்ந்து பல நூல்களிலிருந்து செய்திகளைச் சேகரிக்க வேண்டும்.

பேச்சின் முடிவுதான் நாம் என்ன பேசினோம் என்பதனைப் பார்வையாளர்கள் உணர்ந்து பாராட்டுவதற்கும், பரிசினைப் பெறுவதற்கும் இன்றியமையாததாகும். அதனை ‘முடித்தல்’ என்பர். தொடக்கம் எவ்வாறு சிறப்பாக இருக்க வேண்டுமோ அதே போல சிறந்த கருத்தினைக் கூறி முடிப்பதும் முக்கியமானதாகும். பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள், நேரம் கடந்து விட்டது என்பதற்காக பேச்சினை முடிக்காமல் அப்படியே விட்டுவிடவும் கூடாது. கொடுக்கப்பட்டுள்ள நேரத்திற்குள் பேசுவதற்குப் பலமுறை பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். பேச்சின் முடிவில் நன்றி சொல்லி முடித்தல் மேடைப்பேச்சுக்குரிய பண்பாடாகும்.

பேச்சு தான் நமது வாழ்க்கையின் உயிர் நாடி என்பதனால், இளம் வயிலேயே மேடையில் பேசுகின்ற திறமையை வளர்த்துக் கொண்டால், பிற்காலத்தில் பணியிடமாக இருந்தாலும், அல்லது எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும் சமாளித்துக் கொள்கின்ற பக்குவத்தை மாணவ மாணவியர் பெறமுடியும்’’ என்று பேசினார். அத்துடன், தான் பேச்சாளராக ஆன சுவையான நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டதுடன், மேடைப்பேச்சு பற்றி மாணவ மாணவியர் எழுப்பிய வினாக்களுக்குப் பதிலளித்தார்.

நிகழ்ச்சியில், ஸ்ரீராம் இலக்கியக் கழகம் நடத்திய திருக்குறள் பேச்சுப் போட்டியில், கோவை மாவட்ட அளவில் முதலிடத்தினையும், சென்னையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் முதல் பரிசினையும், தொடர்ந்து நடைபெற்ற திருக்குறள் வினாடி வினா போட்டியில் முதல் பரிசினையும் வென்று,  ‘திருக்குறள் திலகம்’ என்ற விருதினைப் பெற்ற ஏழாம் வகுப்பு மாணவி பா. ஹரிஷினி, பரிசு பெற்ற உரை வீச்சினை வழங்கி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.

முன்னதாக, பயிலரங்கத்திற்கு வருகைபுரிந்தவர்களைப் பள்ளி முதல்வர் இரா.உமாமகேஸ்வரி வரவேற்றார். பள்ளியின் கல்வி ஆலோசகர் வெ.கணேசன் வாழ்த்துரை வழங்கினர். துணை முதல்வர் சு.சக்திவேல் நன்றி கூறினார். பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் தமிழாசிரியர் வீ.கே. கார்த்திகேயன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.