சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும்

கடந்த வாரத்தில் இந்தியாவின் பத்திரிகைகளில் இரண்டு தொழிலதிபர்கள் முக்கிய இடம் பெற்றிருக்கிறார்கள். ஒருவர் காஃபி டேஅதிபராக இருந்த சித்தார்த்தா, அடுத்தவர் பைஜூநிறுவனத்தின் தலைவர் பைஜூ ரவீந்திரன்.

பொதுவாக அரசியல்வாதிகளும், சினிமாக்காரர்களும், சமயத்தில் கிரிக்கெட் போன்ற விளையாட்டைச் சேர்ந்த கோடிக்கணக்கில் பணத்தைக்¢ குவிக்கும் சிலரும் மட்டுமே பத்திரிகைகளில் முக்கிய இடம்பெறும் நிலையில் இவர்கள் இருவரைப் பற்றிய செய்திகள் மக்கள் மத்தியில் முக்கிய இடத்தைப் பெற்றதை பாராட்டத்தான் வேண்டும். ஏனென்றால் உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடான இந்தியா, நன்கு செழித்து வளர்வதற்கான அனைத்து வாய்ப்புகளையும் கொண்ட நாடு. அதே நேரத்தில் வேலையில்லா திண்டாட்டம் தொடங்கி பல சிக்கல்களையும் கொண்ட நாடு நம் நாடு.

இந்தியாவைப் பொறுத்தவரை இந்த புதிய நூற்றாண்டு மிக முக்கியமான காலகட்டம். உலகின் அதிக மக்கள்தொகையும், ஏராளமான சிக்கல்களும் உள்ள ஒரு நாடாக இன்று ஒரு புதிய பாதையில் காலடி எடுத்து வைத்துள்ளது, நம் நாடு. புதிய பொருளாதார கொள்கையின் தாக்கம் ஒரு புறம். தற்போதைய இந்திய அரசின் பொருளாதாரம் சார்ந்த வளர்ச்சித் திட்டங்கள் ஒரு புறம் என்ற நிலையில் நாடு உள்ளது. அரசின் வேலைவாய்ப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் என்று இருந்தாலும் இனிவரும் காலங்களில் இந்தியா போன்ற நாடுகளில் தொழில் முனைவோருக்கான வாய்ப்புகளே அதிகம் என்று தோன்றுகிறது.

அதற்கேற்ப ஸ்டார்ட் அப் இந்தியா’, ‘மேக் இன் இந்தியாஎன்று தொழில்சார்ந்த திட்டங்கள் அறிமுகமாகும்போது பல இளைஞர்கள் இப்பாதைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உலகமயமாக்கல் சூழலில் இதற்கான வளர்ச்சி வாய்ப்புகளும் அதிகம். அப்படி உருவானவர்கள்தான் காஃபி டேசித்தார்த்தும், ‘பைஜூரவீந்திரனும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கர்நாடக மாநிலம் சிக்மகளூரைச் சேர்ந்த சித்தார்த் குடும்பம், இருநூறு ஆண்டு பழமையான காபி எஸ்டேட் தொழிலைச் சேர்ந்தது. ஆனால் சித்தார்த்தா தங்கள் குடும்பத் தொழிலை அப்படியே தொடரவில்லை. புதுமையை விரும்பி பங்கு மார்க்கெட் நுட்பங்களைக் கற்றுக்கொண்டார். காபி கொட்டை ஏற்றுமதி, காபி தூள் விற்பனை என்பதைத் தாண்டி யோசித்தார். தகவல்தொழில்நுட்பம் என்ற ஒரு துறை வளர்ந்து லேப்டாப்பும் கையுமாக திரியும் ஐ.டி. துறையினர்போல ஒரு புதிய வாடிக்கையாளரைக் கண்டறிந்து கஃபே காபி டேஎனும் சங்கிலித் தொடர் கடைகளை உருவாக்கினார். ஒன்றல்ல, இரண்டல்ல ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் இந்த குழுமத்தின் கீழ் உருவாக்கி நிர்வகிக்கப்பட்டன. கிட்டத்தட்ட முப்பதாயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைத்தது.

ஆனால் என்ன காரணம் என்று இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் சித்தார்த்தா மரணமடைந்திருக்கிறார். பங்கு மார்க்கெட்டில் நஷ்டமடைந்திருக்கிறார், வருமான வரித் துறை சிக்கல்கள் என்று பல காரணங்கள் சொல்லப்படுகிறது. உண்மையில் இளைய தலைமுறைக்கு ஒரு வழிகாட்டி தொழில் முனைவோராக விளங்கிய ஒருவரை நாடு இழந்திருக்கிறது. இது புதிதாகத் தொழில் தொடங்குவோருக்கு ஒரு சிறிய உறுத்தலாகவே இருக்கிறது. எனவே இதுகுறித்த சிக்கல்களை விடுவிக்க வேண்டும். தனிப்பட்ட காரணங்களுக்காக நடைபெறும் மரணங்களுக்கு யாரும் பொறுப்பாக முடியாது. அதுகுறித்து விவாதங்களும் தேவையில்லை. ஆனால் பொதுவெளியில் சந்தேகங்களையும், யூகங்களையும் எழுப்பும் இதுபோன்றவற்றில் உள்ள உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். அது புதிய தொழில்முனைவோருக்கு தொழில் துறை சார்ந்த உலகில் உள்ள சிக்கல்களை அறிந்துகொண்டு எதிர்கொள்ள உதவும்.

இன்னொரு தலைப்புச் செய்தியாக இடம்பெற்றுள்ளவர் கேரளாவைச் சேர்ந்த பைஜூ ரவீந்திரன். கல்வி சார்ந்த ஒரு தொழிலாக இன்று வளர்ந்து ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்துள்ள இந்தியர்களில் ஒருவராக உயர்ந்திருக்கிறார். கேரளாவின் ஒரு சாதாரண சிறு நகரத்தில் பிறந்த இவரின் பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள். இவரும் தொடக்கத்தில் பொறியியல் கல்வி கற்று ஒரு நிறுவனத்தில் பணியில் இணைந்தவர்தான். இவருடைய பாடம் சொல்லிக்கொடுக்கும் திறனை அறிந்துகொண்டு அதை நவீன தொழில் நுட்பத்தின் மூலம் வளர்த்தெடுத்தது, இன்று ஒரு பெரிய ஆலமரம் போன்ற தொழிலாக வளர்ந்திருக்கிறது.

ஒரு சாதாரண தொழிலான, சொல்லப்போனால் நாடெங்கும் உள்ள பல ஆயிரம் ஆசிரியர்கள் பகுதிநேர தொழிலாக செய்து வரும் ஒரு சாதாரண தொழிலை வானளாவிய உயரத்துக்கு தனது சிந்தனை மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் பைஜூ ரவீந்திரன் எடுத்துச் சென்றிருக்கிறார். தினந்தோறும் லட்சக்கணக்கானோர் பேஸ்புக்கில் லைக் போட்டுக்கொண்டு இருக்கும் வேளையில் பைஜூ ரவீந்திரன், அந்த பேஸ்புக் முதலாளியான ஜூகன்பர்க்கிடம் தனது தொழலை நிரூபித்து, அவரை லைக் போட வைத்து, புதிய முதலீடு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இது நமது நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு ஒரு உந்து சக்தி என்றால் அது மிகையாகாது.

காபிடே சித்தார்த்தா, பைஜூ ரவீந்திரன் இருவருமே புதிதாக தொழில் தொடங்குவோரின் சாதக, பாதகங்களை எடுத்துக்காட்டும் ரோல் மாடல்கள். இவர்கள் போன்றவர்களை இளைஞர்கள் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு கொள்ள வேண்டியதைக் கொண்டு, தள்ள வேண்டியதை தள்ள வேண்டும். பாடபுத்தகங்களில் இதற்கு மாதிரிகள் கிடையாது. நிஜ வாழ்க்கையில் வெல்ல இதுபோன்ற நிஜ மாதிரிகள் வேண்டும். இதுபோன்ற செய்திகளை விவசாயம், தொழில், கலை என அனைத்திலும் புதிய தொழில் தொடங்கி வேலைவாய்ப்பு வழங்கி, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த பாடுபடும் இளைஞர்களை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும். செய்தியாளர்களும், ஊடகங்களும் அவர்களை மற்றவர்களுக்கு நன்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும்.