”வாழ்வில் குறிக்கோள்களை வைத்துக் கொள்ளுங்கள்”

சுவாமி சுகபோதானந்தா அறிவுரை

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் “மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் “-மனித மனதின் கேள்விகளுக்கு ஒரு பதில், என்ற நிகழ்ச்சி ஆர்.எஸ் புரம், கிக்கானி மேல்நிலைப்பள்ளி, சரோஜினி நடராஜன் கலையரங்கத்தில் நடைபெற்றது. சுவாமி சுகபோதானந்தா சிறப்புரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் சுவாமி சுகபோதானந்தா கூறியதாவது, வாழ்வில் ஒரு மத்திய நோக்கம் இருக்க வேண்டும். ஒரு குறிக்கோளை நோக்கி நம் வாழ்க்கைப் பயணம் செல்ல வேண்டும். வாழ்வில் நமக்கு எதிர்பார்ப்புகள் இருக்க வேண்டும் அந்த எதிர்பார்ப்புகளை நாமே உருவாக்க வேண்டும். அடுத்தவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.  நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் பிரதிபலன் பாராமல் அடுத்தவர்களுக்கு உதவுங்கள்.

நமக்குரிய சரியான ஆசிரியரை தேர்வு சரிசெய்து கற்றுக் கொள்ளுங்கள், கற்றலை பரிச்சயப் படுத்திக் கொள்ளுங்கள், எதையெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் குணம் நம்மில் பலருக்கு இருக்கிறது. அடுத்தவர் செய்யும் குற்றங்களை கண்டுபிடிப்பதில் அப்படி ஒரு அலாதியானசந்தோஷம் நமக்கு இருக்கிறது. இப்படி குற்றம் கண்டுபிடிப்பதை வழக்கமாக வைத்திருந்தால் நாளடைவில் அது போதை வஸ்துவாக மாறி நமது அறிவு பார்வையை குருகலாக்கி விடும். இருட்டை சந்திப்பதை விட ஒரு சின்ன மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது சிறந்தது.

எந்த ஒரு செயலையும் கூர்ந்து கவனித்தல் வேண்டும். அதுவே நம் வாழ்க்கையின் ஆயுதமாய் அமையும். மேலும் வாழ்க்கை ஒரு விளையாட்டு, ஆடி மகிழுங்கள் வாழ்க்கையை.  ஒரு புதிர் பயணம் அதில் எதிர்பாராமல் வரும் திருப்பங்களை ரசிக்கப் பழகுங்கள். மன அமைதியே நமது நண்பன்.  செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை. கவனித்தலே நமது செல்வம்.

அறிவு மையம் உணர்ச்சி மையம் என நம் அனைவரின் உடலிலும் இரண்டு மையங்கள் இருக்கின்றன. புத்தகங்களைப் படிப்பதன் மூலம் உடம்பில் இருக்கும் அறிவு மையம் தூண்டப்படுகிறது. நேரடி அனுபவங்களால் உணர்ச்சி மையம் உயிர் பெறுகிறது. ஆக அறிவு மையம் உணர்ச்சி மையம் என இந்த இரண்டு முழுமையாக வேலை செய்தால்தான் ஒருவன் முழு மனிதனாகின்றான்.  வாழ்க்கையில் நிகழ்கின்ற மாற்றங்களையும், அவற்றை எதிர் கொள்ளவும், அவற்றிற்கேற்ப நம்மை மாற்றிக் கொள்ளவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.சாமர்த்தியமாக செயல்பட்டு எதிர்புகளை வெல்ல வேண்டும்,என்று சிறப்புரையாற்றினார்.

நிகழ்வின் இறுதியில் பார்வையாளர்களுக்கு ’வார்த்தை இல்லாத ஞானம், வாழ்வையும் சாவையும் கொண்டாடுங்கள்’ என்ற புத்தகத்தினைப் பரிசளித்து ஆசிர்வதித்தார் சுவாமி சுகபோதானந்தா.