கனவுகள் மெய்ப்பட திட்டமிடுதல் அவசியம்

– அடையார் ஆனந்தபவன் நிறுவன இயக்குநர் சீனிவாசராஜா

கோயமுத்தூர் ‘இன்னவேட்டிவ் சர்வீஸ்’ நிறுவனம் சார்பில் அவினாசி சாலையில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் அரங்கில் ‘கனவு மெய்ப்பட வேண்டும்’ என்ற தன்னம்பிக்கை பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது.

அடையார் ஆனந்த பவன் நிறுவன இயக்குநர் சீனிவாசராஜா பேசுகையில், ‘ஆரம்பத்தில் எனது குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது. அப்போது நாங்கள் ஒருவேளை உணவு மட்டுமே உண்போம். அந்த சூழ்நிலையில், ஒரு ஜோதிடர் என் தாயாரிடம், நான் நன்றாகப் படித்து, நல்ல நிலைக்குச்சென்று, வெளிநாடு செல்லும் நிலை வரும்போது குடும்பம் நன்றாக இருக்கும் என்றாராம். அப்போதே ஒரு நாளாவது விமானத்தில் செல்ல வேண்டும் என்று கனவு காண ஆரம்பித்தேன். இந்நிலையில் பள்ளிக் கட்டணம் செலுத்தாததால், பள்ளியில் இருந்து வெளியேறினேன். தாயின் அறிவுரையின்பேரில், தந்தைக்கு உதவியாக வேலை செய்ய சென்றேன். நாங்கள் அப்போது விவசாயத் தொழிலில் தோல்வி கண்டு சிறிய அளவில் இனிப்புக்கடை வைத்திருந்தோம். அங்கு செல்லும் முன், நீங்கள் கூறிய ஜாதகம் எப்போது நடக்கும் என்று அம்மாவிடம் கேட்டதற்கு, எந்தத் துறையைத் தேர்வு செய்தாலும், அதில் முதலாவதாக வர வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய். அப்போது நீ ஜெயிக்கலாம் என்று ஊக்கமளித்தார்.

ஒரே வாரத்தில் நான் அம்மா செய்யும் அனைத்து வகை இனிப்புகளையும் செய்யக் கற்றுக்கொண்டேன். சிறிது வளர்ந்த பின் எனது தந்தையிடம் இனியொரு கடை வைக்க வேண்டும் என்றபோது, முதலில் அவரும் எனது சகோதரரும் வேண்டாம் என்றனர். என் அம்மா, அப்பாவிற்குத் தெரியாமல் செய்த உதவியுடன், மேலும் சிறிது வங்கிக்கடன் வாங்கி 1992 இல் ஒரு சிறிய கடை ஆரம்பித்தேன். பின்னர், அப்பாவும் சிறுசிறு ஆலோசனைகள் தந்து, ரூ. 5 இலட்சமும் கொடுத்தார். கடையைத் திறந்தபோது நான் எதிர்பார்த்ததைவிட அதிக வாடிக்கையாளர்கள் வந்தனர். பின்னர் எனது கனவான விமானத்தில் செல்வது, விருது வாங்குவதற்காக அமெரிக்கா சென்றபோது தீர்ந்தது.

45 வயதிற்கு மேல் உள்ளவர்கள் எங்களது பண்டங்களை சாப்பிட முடியாமல் இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது 90 வயது உள்ளவரும் எங்களது இனிப்புகளை சாப்பிட முயற்சித்து வருகிறோம். கனவுகள் மெய்ப்பட திட்டமிடுதல் அவசியம். ஒருவன் முதலில் தன்னை நேசித்து, தன்னைச் சார்ந்தவர்களையும் நேசித்து வாழ வேண்டும்’ என்றார்.

‘‘உயரம் என்றால் எவரெஸ்ட், வெற்றிக்கு நெவர் ரெஸ்ட்’’

கவிஞர் கவிதாசன் பேசியதாவது, ‘கனவு மெய்ப்பட வேண்டும் என்றார் பாரதி. கனவு காணுங்கள் என்றார் கலாம். 21 ஆம் நூற்றாண்டின் கண்டுபிடிப்புகள் இணையமோ அல்லது செயற்கைக்கோளோ அல்ல. மனிதன் நினைத்தால் தன்னை மாற்றிக் கொள்ள முடியும் என்பதுதான் இந்த நூற்றாண்டின் சிறப்பம்சம். ‘விதி வழி செல்வதே வாழ்வு’ என்றெண்ணி வேதனைக் கடலில் மூழ்காமல், மதி வழி சென்று முயற்சித்தால் சாதனை படைக்கலாம் என்ற கொள்கையைப் பின்பற்றுபவர் அடையார் ஆனந்தபவன் நிறுவனர். அவரைப் போன்றவர்கள் சாதிக்கிறார்கள், எங்களைப் போன்றவர்கள் போதிக்கிறோம்.

தேவை, பழக்கம், சூழ்நிலை, பிறருடைய தூண்டுதல், கர்வம் போன்றவற்றின் காரணமாக எண்ணம் ஏற்படுகிறது என்கிறார் வேதாத்திரி மகரிஷி. எண்ணங்களை நாம்தான் உருவாக்குகிறோம். பிறகு அந்த எண்ணங்கள் நம்மை உருவாக்குகின்றது. வாழ்க்கையை வெறுக்காமல் இது எனது வாழ்க்கை என்று மாற்றி யோசிக்க வேண்டும். பயிற்சியும் முயற்சியும் தொடர்ந்தால் சாதாரண மனிதனும் சாதனையாளர் ஆகலாம். உயரம் என்றால் எவரெஸ்ட், வாழ்வில் தொடர்ந்து உயர வேண்டும் என்றால், நெவர் ரெஸ்ட்’ என்றார்.

 

‘இயந்திரம் போன்று நாம் இருக்கக் கூடாது’

வாழ்வியல் நிபுணர் பரமன் பச்சமுத்து பேசுகையில், ‘கும்பகோணம் சென்றபோது அங்கே ஓர் ஆலயத்தின் முன் ஒருவர், கடுமையாக உழைத்தும் பலனில்லையே. ஏன் கடவுளே இந்த சோதனை என்று புலம்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த கருவூரத்தேவர், கனவு கண்டு வேலை செய்தால் மட்டும் உயர்ந்துவிட முடியாது. கொஞ்சம் அறிவும் திட்டமிடுதலும் அவசியம் என்றார். ஒருமுறை பாண்டிச்சேரி சென்றபோது, அங்கு ஒரு சிறிய இளைஞனை ஹோட்டல் உரிமையாளர் திட்டிக்கொண்டிருந்தார். ஏன் என்று கேட்க, ஒன்றரை வருடமாக இவனிடம் எந்த மாற்றமும் இல்லாமல், வேலைக்குச் சேர்ந்தபோது எப்படி இருந்தானோ அதேபோன்று இருக்கிறான் என்றார் உரிமையாளர்.

இயந்திரம் எப்போதும் ஒரே மாதிரிதான் இயங்கும். அதை முன்னேற்ற முடியாது. அப்படி எதுவும் செய்ய வேண்டுமெனில், அதனை நாம்தான் மாற்ற வேண்டும். இயந்திரம் போன்று நாம் இருக்கக் கூடாது. நாம் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் அனைவரும் ஊக்கமுடையவர்களாக இருக்க வேண்டும் என நினைக்கிறோம். அதேபோல் நாமும் ஆற்றல், ஊக்கமுடையவர்களாக இருக்க முயற்சிக்க வேண்டும். நாம் எப்படி இருக்கிறோமோ அப்படித்தான் நமது வாழ்க்கை.

பள்ளியில் முதல் வரிசை மாணவர்கள் படிப்பாளிகள். ஆனால் அதைவிட கடைசி வரிசை மாணவர்கள் பெரும் படிப்பாளிகள். ஆம், இவர்கள்தான் பின்னாளில் தொழில் தொடங்கி, அதில் முதல் வரிசை மாணவர்களை வேலைக்கு நியமிக்கின்றனர். அதிகம் அவமானப்பட்டவர்கள் அதிகம் முயற்சித்து சாதிப்பர். வாழ்வில் நாம் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கக் கூடாது. யாரிடம் அதிக ஆற்றல் உள்ளதோ அவர்களது கனவு மெய்ப்படும். ஆற்றல் அதிகம் இருக்கும் இடத்தை நோக்கியே உலகமே திரும்பும். எப்போது ஒருவனுக்குத் தன்னைப் பார்த்துக் கொள்வதே போராட்டமாகத் தோன்றுகிறதோ, அவனால் வாழ்வில் எதையும் சாதிக்க முடியாது.

மனிதன் என்பவன், உடல், உள்ளம், உணர்ச்சி, உயிர், ஆன்மா ஆகியவற்றின் தொகுப்பு. எப்போதும் வீடு, அலுவலகத்தில் முடங்காமல், குறிப்பாக காலை அல்லது மாலை வேளையில் வானத்தின் கீழ் இருப்பவர்களுக்கும் சமைத்த உணவை மூன்று மணி நேரத்தில் சாப்பிடுவர்களுக்கும் உயிர் ஆற்றல் பெருகும். ஒருவரின் முதல் சொத்து, உடல். நாம் நம் உடலை சரியாகப் பார்த்துக்கொண்டால் மட்டுமே உள்ளம் நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தின் மூலமே உயிர் வாழ முடியும். வியாபாரம் என்ற வலையில் முழுவதும் விழுந்துவிடக் கூடாது. பிறரின் கனவு நிறைவேற நீங்கள் உதவி செய்யுங்கள். உங்கள் கனவு தானாக நிறைவேறும். வெறும் காகிதத்தில் எழுதினால் ‘குறிக்கோள்’, அத்துடன் உணர்ச்சியைக் கலந்தால் அதுவே ‘கனவு’. எனவே, கனவுகளை உணர்வுகளோடு கலந்து தினசரி அதைக்குறித்து சிந்தியுங்கள்’ என்றார்.

கனவு மெய்ப்பட வேண்டும்

‘இன்னவேட்டிவ் சர்வீஸ்’ நிறுவனத் தலைவர் வெங்கடேசன் பேசுகையில், ‘மதுரை, புதுச்சேரி, ஓசூர், ராமநாதபுரம், சென்னை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய ஏழு இடங்களில் 10க்கும் மேற்பட்ட சிறந்த பேச்சாளர்கள், 3000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களைக் கொண்டு இதுபோன்ற பயிலரங்குகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். கடந்த 5 வருடமாக நடந்துவரும் இந்த நிகழ்வு தற்போது 8 ஆவது முறையாக இங்கு நடக்கிறது. ஒன்றரை வருடங்களுக்கு முன் இந்த நிகழ்வை தமிழில் நடத்தத் திட்டமிட்டபோது வரவேற்பு எப்படி இருக்கும் என்ற சந்தேகம் எழுந்தது. நல்ல ஆங்கிலப் பேச்சாளர் என்றால், அதை ரூ. 10 ஆயிரம் கொடுத்தாவது பார்க்க நம்மிடையே ஆர்வம் உள்ளது. இருப்பினும் நம் தாய்மொழி தமிழில் நடத்தும் நிகழ்ச்சியை பலர் ஊக்குவித்ததன் பேரில், சென்னையில் இந்நிகழ்ச்சியை ஆரம்பித்தபோது சிறிது பதற்றம் இருந்தாலும், முழு அரங்கமும் நிரம்பியது. அதற்கு பர்வீன் சுல்தானா, கலியமூர்த்தி ஐ.பி.எஸ். அவர்களும் உறுதுணையாக இருந்தனர்.

இந்த நிகழ்வு, நம் கனவு மெய்ப்பட என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அலசுகின்றது. மகாகவி பாரதியார் சமூக நலனும், தனித்திறனும் கொண்டவர். அவரைப் போன்று நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் திருப்தியும், திறனும் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். இது நம் மனதை சார்ந்தது. எனவே நம் மனதை வலுப்படுத்த வேண்டும். நம் வாழ்க்கையில் அடிக்கடி சக்தி குறைபாடு இருக்கும். அந்தக் குறைபாடு நம்முடைய தீவிரமான எண்ணங்களால் தீர்க்கப்படும்.

இந்நிகழ்விற்கு சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களின் ஒத்துழைப்பு குறிப்பிடத்தகுந்தது. வேலன் காஃபி, துளசி பார்மஸி, நெல்லை லாலா, சுமன் ஜூவல்லரி போன்ற நிறுவன உரிமையாளர்களின் ஈடுபாடும் இந்நிகழ்விற்கு வெற்றியைத் தருகிறது. என் வாழ்க்கையில் தொழில் தர்மம் மற்றும் ஒழுங்குமுறைகளைக் கற்றுக்கொடுத்தவர் எனது நிறுவனத் தலைவர் ராஜ்காந்த். அவரது ஆசியினால் எனது வெற்றி செயல்கள் தொடர்கின்றன’ என்றார்.

‘கனவுகளை காட்சிப்படுத்துங்கள்’

பேராசிரியை பர்வீன் சுல்தானா பேசுகையில், ‘புத்தன் காட்டிய வழியில் நடக்க முடியாமல் புத்தனே எதிர்வந்து நின்றாலும், அந்த புத்தனை நீ கொலை செய்யலாம் என்கிறார். மேலும் அவர் நம்மை தனிமனிதனோடு, அடுத்து சங்கத்தோடு, பிறகு கொள்கையோடு நில் என்கிறார். அனைவருக்கும் கனவு இருக்கிறது. ஆனால் ஒருவருடைய இலக்கு மட்டுமே கனவாகிவிட முடியாது. கனவுகளை காட்சிப்படுத்தி பார்க்கக்கூடிய துணிச்சல் வேண்டும். மனதளவில் வலிமையுடைய மனிதனால்தான் அடுத்தடுத்து கனவுகளை நோக்கிச் செல்ல முடியும். நம்மை ஊக்கப்படுத்த ஒரே ஒரு சொல் போதும். ஆர்வம் மற்றும் உணர்ச்சி, நமக்குத் தெரியாத பல விஷயங்களை நம் முன் கொண்டு வருகிறது. நமது ஆற்றலைக் குறைக்க நம்முன் சிலர் நம்மையே நிந்தனை செய்வர். அப்போது அதனை நமக்கு சாதகமாக நேர்மறையாக பயன்படுத்த வேண்டும். ஒரு விஷயத்தை மிகவும் ஆழமாக யோசித்தால் அது நம் காலடியில் நிச்சயம் ஒருநாள் வரும். அதற்கு நாம் மனதில் வைராக்கியத்தை வளர்க்க வேண்டும்.

தாவிக் குதித்து செல்லும் தவளையால் ஏன் ஆய்வுக்கூட குடுவையின் தண்ணீரில் இருந்து தாவி வெளியேற முடியவில்லை என்பது குறித்து ஆய்வு செய்த நிபுணர்கள் ஒரு முடிவை வெளியிட்டனர். அது, தவளை இன்னும் கொஞ்சம் இந்த சூட்டைப் பொறுத்துக் கொள்ளலாம் என்று எண்ணியே நேரத்தைத் தள்ளிப் போடுகிறதாம். இனி இந்த சூட்டைத் தாங்கவே முடியாது என்ற நிலை வரும்போது, அதனுடைய ஆற்றல் முழுவதும் குறைந்துவிடுவதால் தவளை இறக்கிறதாம். எனவே வாழ்க்கையில் சோதனைகள் தொடரும்போது, தொடர்ந்து நீங்கள் அதனைப் பொறுத்துக் கொண்டிருக்க தேவையில்லை. வேறு ஒரு மாற்றத்தை நோக்கி முன்னேறலாம்.

பைபிளில் ஒரு வாசகம், யார் என்ன சொன்னாலும் நம் மனதில் மாற்றம் ஏற்படாமல் நமக்கு உயர்வுகள் சாத்தியமில்லை என்கிறது. நிலையாமையை ஏற்றுக்கொள்ளாதது பயம். கோபம் என்பது நம் கட்டுப்பாட்டை மீறி நடப்பது, பொறுமை என்றால், அது நம் கட்டுப்பாட்டை மீறுகிறது என அறிந்து, அதனைக் கட்டுக்குள் வைப்பது. ஒருவனை ஏற்றுக்கொள்ளாதது, பகை. ஏற்றுக்கொள்வது, காதல். பல நேரங்களில் சொல்லில் இருக்கும் பொருளை உணராமல் இருப்பதுதான் பிரச்னை. மனதைத் தெளிவாக வைத்துக் கொண்டால் சொற்களின் அர்த்தம் புரியும். அப்போது உணர்தல் என்பது தானாக நடக்கும்’ என்றார்.

இன்னவேட்டிவ் சர்வீஸ் நிறுவனர் வெங்கடேசன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.