நனவான மருத்துவக்கல்லூரி கனவு

‘பெரிதினும் பெரிது கேள்’ என்பது பாரதியின் வாக்கு. அதை வாழ்க்கையில் தனது கொள்கையாகக் கொண்டு வாழ்பவர்தான் டாக்டர் நல்ல ஜி.பழனிசாமி. ஒரு கிராமத்து விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு நகரத்தில் ஒரு பாதுகாப்பான வேலை, அழகான குடும்பம், கொஞ்சம் பணம் என்று அமைந்தாலே திருப்தியடைகின்றவர்கள் பலர். ஆனால் நல்ல ஜி.பழனிசாமியின் எண்ணமே வேறு. இவர் டாக்டர் அப்துல்கலாம் சொன்னதுபோல ஒரு கனவு காண்பவர். அதுவும் மனிதனைத் தூங்க விடாத கனவு காண்பதில் இவர் வல்லவர்.

இந்தியாவில் கல்வி பயிலும் பலருக்கு அமெரிக்கக் கனவு எப்போதும் உண்டு. அதிலும், எப்படியாவது அங்கே உயர் கல்வி அல்லது பணி வாய்ப்பு பெற்றுவிட்டால் போதும், செட்டிலாகி விடலாம் என்ற எண்ணமுள்ளவர்களே பலர். ஆனால் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து மருத்துவக்கல்வி பயின்ற இவரின் எண்ண ஓட்டமே வேறு. இவரும் அமெரிக்கா போனார். நல்லதொரு மருத்துவப் பணியில் இணைந்தார். அதோடு திருப்தியடையவில்லை. திருமணம், குழந்தைகள் என்று பொறுப்புகள் கூடிய நிலையிலும் உயர் கல்வி பயின்றார். ஒருபுறம் இடைவிடாத உழைப்பு; இன்னொரு புறம் படிப்பு என்று தனது நேரத்தைச் செலவிட்டார். அத்தனையும் எதற்காக என்றால் அவரது கனவை நனவாக்கிடத்தான். அது என்ன கனவு?

அமெரிக்காபோல நமது இந்தியாவில், நமது பகுதியில் சர்வதேச தரத்தில் ஒரு மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பதுதான் அவரது கனவு. அந்த கனவுதான் கோவையில் தற்போதுள்ள கேஎம்சிஎச் மருத்துவமனையாக மலர்ந்து, நனவாகியுள்ளது. கோவையின் அதிநவீன வசதிகள் அடங்கிய முதல் வரிசை மருத்துவமனைகளில் ஒன்றாக கேஎம்சிஎச்  இன்று வெற்றிகரமாக மருத்துவ சேவை புரிந்து வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் அதுவும் கோயம்புத்தூர் போன்ற ஒரு வளர்ந்து வரும் நகரப் பகுதியில் மருத்துவமனை நிர்வாகம் என்பது எளிதான காரியமல்ல. அதனைச் சிறப்பாக செய்து வந்தவர், தொடர்ந்து கல்வித்துறையிலும் காலடி எடுத்து வைத்தார். கலை, அறிவியல் கல்லூரி, நர்சிங் கல்லூரி என்று அதிலும் தனது தனிமுத்திரையைப் பதித்தார்.

சர்வதேச தரத்தில் மருத்துவமனை, பிறகு கல்வி வளர்ச்சிக்காக நிறுவனங்களில் என சாதித்தவுடன் போதும் என்று அமைதியாக அவரது இருந்து விடவில்லை. தனது எல்லைகளை, நோக்கங்களை விரிவாக்கிக்கொண்டே, உயர்த்திக்கொண்டே செல்லும் குணம் கொண்டவர் அல்லவா அவர்?

மறுபடியும் ஒரு மாபெரும் கனவு கண்டார். அதை நோக்கிய பயணத்தையும் தொடங்கினார். அந்த நெடிய பயணத்தின் வெற்றிக்கனிதான் இன்று நமக்குக் கிடைத்திருக்கிறது. ஆம். அப்படித்தான் கேம்எசிஎச் குழுமத்தின் மற்றுமொரு சாதனையான மருத்துவக்கல்லூரி உருவாகி இருக்கிறது.

இது கோவைக்கு பல வகையிலும் பெருமை தரக்கூடிய ஒன்று என்பதோடு, அதன் வளர்ச்சிப் பாதையிலும் ஒரு மைல்கல்லாகத் திகழும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இன்று கோவை ஒரு தொழில் நகரமாகத் திகழ்வதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று, இங்குள்ள தொழிற்கல்வி நிலையங்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. அன்று பெரியோர்கள் போட்ட விதைகள்தான் இன்று மரமாகி, கனிகளைத் தந்திருக்கிறது. திரும்பியபுறம் எல்லாம் தொழில்கல்வி, பொறியாளர்கள் என்று தொழில் நகரம் சீரும் சிறப்புமாகத் திகழ்கிறது.

அதைப்போலவே எதிர்காலத்தில் ஒரு முக்கியமான மருத்துவ சேவை மையமாகத் திகழ்வதற்கான அடித்தளம்தான் இதுபோன்ற மருத்துவக் கல்லூரி.

ஒருகாலத்தில் சென்னை போன்ற மாநிலத் தலைநகரத்தில்கூட இரண்டு பொறியியல் கல்லூரிகள் இருந்தபோது கோவையில் பிஎஸ்ஜி, சிஐடி, ஜிசிடி என்று மூன்று பொறியியல் கல்லூரிகள் இருந்ததுபோல, தற்போது கோவை அரசு மருத்துவக்கல்லூரி, பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுடன் மூன்றாவதாக கேஎம்சிஎச் மருத்துவக் கல்லூரியும் சேர்ந்து கோவைக்கு அணி செய்கின்றன.

இது ஏதோ ஒரு தனிநபர் செய்த சாதனை மட்டும் அல்ல. திருவள்ளுவர் கூறியதுபோல இது ஒரு பேரறிவாளன் திரு, அதாவது ஊருக்கு உதவும் மனப்பான்மை கொண்ட செல்வந்தரிடம் உள்ள செல்வம் மக்களுக்கு பயன்படுவதுபோல கோவையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு உதவும் ஒரு திட்டமாகும். தொழில் துறையைத் தொடர்ந்து கோவை மருத்துவ சேவைத் துறையிலும் தனது முத்திரையைப் பதிக்கத் தொடங்கியுள்ள நேரம் இது. கோவை நகரம் ஒரு மருத்துவச் சுற்றுலா நகரமாக, மருத்துவத்தொழில்லும் கொடிகட்டிப் பறக்க எல்லா தகுதிகளும் கொண்ட நகரமாக வளர்ந்து வருகிறது என்றால் அதற்கு கேஎம்சிஎச் போன்ற மருத்துவக் கல்லூரிகளும், அதைக் கனவாகக் கண்டு தனது கடின உழைப்பால் நனவாக்கிக் காட்டிய டாக்டர் நல்ல ஜி.பழனிசாமி போன்றவர்களையும் பாராட்ட நாடு கடமைப்பட்டிருக்கிறது.