ரயிலே, ரயிலே ஓடி வா…

கோயம்புத்தூரின் இன்றைய வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று இப்பகுதியில் அமைந்துள்ள ரயில் பாதை என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தியாவில் இன்னும் பல ஊர்கள் ரயில் என்ற ஒன்று இல்லாவிட்டால் இருக்கும் இடமே தெரியாமல் இருந்திருக்கக்கூடும். அந்த அளவு ரயில் முக்கியத்துவம் வாய்ந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் போடப்பட்ட ரயில் பாதை கோவைக்கு பல வகையிலும் உதவி வந்திருக்கிறது. ஆனால் கோயம்புத்தூர் நகரமும் அதன் சுற்றுப்புறமும் வளர்ந்த அளவுக்கு ரயில்வே துறை வசதிகள் வளர்ந்ததா என்று பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.

தென்னிந்திய ரயில்வே கோட்டத்தில் அமைந்துள்ள  முக்கிய பகுதிகளில் கோயம்புத்தூரும் ஒன்று. கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல வகையான தொழில்கள் வளர்ந்து நிலை பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்பிற்கு இங்கு உற்பத்தி நடைபெறுகிறது. அதைப் போலவே பல ஆயிரம் கோடி ரூபாய் வணிகம் நடைபெறுகிறது. பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தரும் சிறு, குறு, பெரும் தொழிற்சாலைகள் இப்பகுதியெங்கும் நிறைந்துள்ளன. ஆனாலும்  உட்கட்டமைப்பு வசதிகளைப் பொறுத்தவரை கோயம்புத்தூர் பல வகையிலும் பின்தங்கியுள்ளது.

அதிலும் குறிப்பாக ரயில்வே துறையின் சேவைகள் என்பது கோயம்புத்தூரின் தேவைகளை ஈடு செய்வதாகவே இல்லை என்பது இங்கு வெகுநாட்களாக இருந்து வரும் மனக்குறை ஆகும். ஒவ்வொரு நாளும் இங்கு பயணம் செய்வோரின் தேவைகளை ஈடு செய்யும் அளவுக்கு ரயில் வசதி இல்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.பல ஆண்டுகளாக ரயில்வே துறைக்கு கோரிக்கை வைப்பதென்பது இங்கிருப்பவர்களின் அன்றாடக் கடமைகளில் ஒன்றாக மாறி விட்டது.

பெங்களூருக்கு ஒரு இரவு நேர ரயில் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். பதிலுக்கு ஏற்கனவே கோவையிலிருந்து மதியம் கிளம்பி சென்று கொண்டிருந்த கோயம்புத்தூர் பெங்களூர் ரயிலை எர்ணாகுளம் பெங்களூர் ரயிலாக மாற்றி அலைய விட்டார்கள்.

கோவை வழியாக செல்லும் ரயில்களில் பத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் கோயம்புத்தூர் ஜங்ஷன் வராமலே போத்தனூர் வழியாக போய்விடும். அதை கேட்டதற்கு ஆகட்டும் பார்க்கலாம் என்றிருக்கிறார்கள்.

ரொம்ப போக்குவரத்து நெருக்கடி தாங்க முடியல, தயவு செய்து மோனோவோ, மெட்ரோவோ விடுங்கள் என்று கோயம்புத்தூர் பொதுமக்கள், தொழில் அமைப்புகள் எல்லாம் சேர்ந்து கோரிக்கை மேல் கோரிக்கை வைத்துக்கொண்டே இருந்தார்கள். ஐந்தாண்டுகளுக்கு முன்பு மோனோவோ, மெட்ரோ ரயிலோ பற்றிய அறிவிப்பு வந்தது. அதே நேரத்தில் அறிவிப்பு செய்யப்பட்ட கொச்சின் நகரத்தில் கண் மூடி கண் திறப்பதற்குள் மெட்ரோ ரயில் பணிகள் முடிந்து இந்திய பிரதமர் மோடி கொச்சின் வந்து தொடங்கி வைத்து விட்டு போய் விட்டார். இப்போது அங்கே மெட்ரோ ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது. இங்கே நாம்தான் ஓடிக்கொண்டு இருக்கிறோம்.

இடையில் ரயில்வே அமைச்சர் கோவை வரும் போதெல்லாம் கோவைக்கு பயன் தரும் வகையில் ஒரு ரயில் விடுவது பற்றி அறிவிப்பு செய்து விட்டு போவார். இரவு நேர பெங்களூர் ரயில், இரண்டடுக்கு ரயில் இப்படி ஏதாவது இருக்கும். ஆனால் ஒன்றும் நடைமுறையில் நடக்காது. இந்த நிலையில் தான் கோயம்புத்தூர் பொள்ளாச்சி பாசஞ்சர் ரயில் விடப்பட்டது. இப்பகுதி மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

பல லட்சம் பேரின் வேண்டுதல்கள், பிரார்த்தனைகளுக்குப் பிறகு மனமிரங்கி இந்த கோவை பொள்ளாச்சி பாசஞ்சர் ரயில் தடம் செயல் வடிவம் பெற்றது. ஆஹா, நம் பகுதிக்கு ஒரு ரயில் கிடைத்தது என்ற இப்பகுதி மக்களெல்லாம் மகிழ்ச்சி அடைந்தனர். அந்த நேரத்தில்தான் ரயில்வே துறை அற்புதமாக ஒரு பணியைச் செய்தார்கள்.

ஒரு நகைச்சுவை திரைப்படத்தில் வருவது போல அடுப்பில் விறகெரிக்கலாம்; ஆனால் புகை வரக்கூடாது. கார் இருக்கிறது; ஆனால் பெட்ரோல் இல்லாமல் ஓட்ட வேண்டும். பசிக்கு சாப்பாடு இருக்கிறது; பார்க்கலாம் ஆனால் சாப்பிடக்கூடாது என்பதைப்போல நல்ல முகூர்த்த நேரம் பார்த்து மக்கள் கண் அசரும் நேரத்தில் இந்த கோவை பொள்ளாச்சி ரயிலை விட்டிருக்கிறார்கள்.

கோயம்புத்தூர் நகரத்தில் இருந்து பொள்ளாச்சி, திருப்பூர், மேட்டுப்பாளையம் ஆகிய நகரங்களுக்குத் தான் அதிக மக்கள் பயணம் செய்கிறார்கள். அதுவும் காலையும் மாலையும் மக்கள் போக்குவரத்து நெரிசலில் படும் அவதி சொல்லி மாளாது. அதனால் நடைபெறும் விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகம். எனவே இந்த நிலையில் ஒரு ரயில் பொள்ளாச்சிக்கு வருகிறது என்பது எவ்வளவு மகிழ்ச்சியை தந்திருக்க வேண்டும் அதற்கு பதிலாக இது குழப்பத்தைத்தான் தந்திருக்கிறது.

காரணம் இந்த பாசஞ்சர் ரயில் மதியம் ஒன்றரை மணி அளவில் கோவையில் இருந்து கிளம்பி பொள்ளாச்சி போகும். அங்கிருந்து கிளம்பி நான்கு மணிக்குள் பாதுகாப்பாக கோவை வந்து சேர்ந்து விடும். அதன்பிறகு மக்கள் வழக்கம் போல பீக் அவர் எனப்படும் நெரிசல் நேரங்களான காலையும் மாலையும்  வழக்கம் போல பேருந்தில் பயணம் செய்து கொள்ள வேண்டியதுதான். மதியம் கொஞ்ச நேரம் கண் அசர நினைப்பவர்களும், கூட்டமில்லாத பாசஞ்சர் ரயிலில் சுற்றுப்பயணம் செய்ய நினைப்பவர்களும் பயணம் செய்ய இந்த பாசஞ்சர் ரயில் ஒரு நல்ல வாய்ப்பு.

ஏங்க தெரியாமதான் கேட்கிறோம். நாங்க என்ன பண்ணனும்னே புரியலியே? கொஞ்சம் சொல்லுங்க அதை செய்றோம்

தென்னிந்தியாவில் அதிக மக்கள் தொகையுள்ள தொழில் நகரங்களில் ஒன்று கோயம்புத்தூர். தென்னிந்திய ரயில்வேக்கு அதிக வருமானம் தரும் ரயில் நிலையங்களில் ஒன்று கோயம்புத்தூர். நாட்டின் உற்பத்திக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்புக்கும் அதிக பங்களிப்பு தரும் நகரங்களில் ஒன்று.

அதற்கு ரயில்வே போன்ற வசதிகள் தகுந்தவாறு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப் படுவது எந்த வகையிலும் சரியல்ல. அதிலும் தேவையான ரயிலே விடாமல் இருப்பது, விட்டாலும் இது போல நேரங்கெட்ட நேரத்தில் விடுவது என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல என்பதை ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் உணர வேண்டும்.

ஆனால் ஒன்று. அடிப்படை வசதிகளை எதிர்பார்ப்பதும், கேட்பதும் மக்களின் உரிமை. ஆவன செய்ய வேண்டியது அரசின் கடமை; நினைவூட்டி பெற்றுத்தர வேண்டியது மக்கள் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளின் கடமை. ஊதுகிற சங்கை ஊதுவோம், வேறென்ன செய்ய முடியும்?

– ஆசிரியர் குழு.