அடுத்தவன் உழைப்பைத் திருட கூடாது

தமிழ் சினிமாவில் நடிப்பில் முத்திரை பதித்தவர்கள் ஏராளமான பேர் இருந்தாலும், அழகு மற்றும் நடிப்பு இவை இரண்டும் ஒருங்கே அமையபப்பெற்றவர் நவரசநாயகன் கார்த்திக். இவர் தனது வாரிசை முதன் முதலாக மணிரத்னம் இயக்கத்தில் அறிமுகப்படுத்தினார். கடல் என்ற படத்தில் அறிமுகமான அவர் தான் கௌதம் கார்த்திக். தற்போது தமிழ் சினிமாவை மிகவும் நன்றாகப் புரிந்து கொண்டு பல நல்ல படங்களில் நடித்து வருகிறார். ஒரு அதிகாலை நேரத்தில் நாங்கள் அவரை சந்திக்கும் நேரம் கிடைத்த போது அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட விஷயங்களை காண்போம்.

கோவை எனக்கு எப்போதும் பிடிக்கும். அதற்கு பலகாரணம் இருக்கின்றது. என் பள்ளிப் படிப்பை ஊட்டியில் படிக்கும் போது வார இறுதி நாட்களை இங்குதான் கொண்டாடுவேன். மனசுக்கு பிடிச்ச இடம். சினிமா மீது எனக்கு எப்போவும் காதல் அதிகம். ஆனால் எனக்குன்னு ஒரு தனி இடம் பிடிப்பதற்கு என்னால முடிஞ்ச அளவு உழைப்பைப் போட்டு கொண்டு இருக்கிறேன். மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த பொழுது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.

சினிமாவைப் பற்றி பெரிய அளவில் கற்றுக்கொண்டதும் அப்படத்தில் பணியாற்றும் பொழுதுதான். அந்தப் படத்துக்கு பிறகு எனக்கு சில படங்கள் சறுக்கல்களைக் கொடுத்தது. இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் என் பாதையை நோக்கி பயணிக்கத் தொடங்கினேன். அதற்கு பிறகுதான் எனக்கு ‘ரங்கூன்’ மற்றும் ‘இவன் தந்திரன்’ஆகிய படங்கள் வந்தன. இவை என்னை சினிமாவில் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல உதவியாக இருந்தன. இந்த இரண்டு படங்களின் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்து நடிக்க ஆரம்பித்தேன். தற்போது படம் பார்த்து எல்லோரும் என்னை பாராட்டுகிறார்கள்.

‘ரங்கூன்’ எந்த அளவுக்கு மக்களை ஈர்த்ததோ அதே அளவுக்கு ‘இவன் தந்திரன்’ படமும் மக்களை ஈர்க்கும். காரணம், இளம் சமுதாயம் என்ன மாதிரியான கஷ்டங்களை சந்திக்கிறார்கள் என்பதை இயக்குநர் கண்ணன் அழகாகக் காட்டி இருக்கார். அவர் மிகவும் திறமையான இயக்குநர். ரொம்ப சீக்கிரமாக நேரத்தை வீண் அடிக்காமல் படத்தை எடுத்து முடிக்கும் இயக்குநர் என்றால் அது கண்ணன் தான்.

‘இவன் தந்திரன்’ கதை எனக்கு பிடித்திற்கு காரணம், நான் சின்ன வயசுல ஏதோ ஒரு பொம்மை எடுத்து போட்டு உடைச்சு, அதுல என்ன சுவாரசியம் இருக்குனு பார்த்துட்டு இருப்பேன். அப்போது எனக்குள்ள ஒரு குட்டி இஞ்சினியர் இருந்தார்னு சொல்லலாம்.

எங்க அப்பா எனக்கு நிறைய சுதந்திரம் கொடுப்பார். ஆனா அவர் என்னோட நடிப்பில் தலையிட மாட்டார். ஏன் என்றால் அவருடைய சாயல் எனது நடிப்பில் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான். தொழில் என்று வரும் போது அப்பாவும் நானும் விலகித்தான் இருப்போம்.

சமீபகாலங்களில், தமிழ் சினிமா ரசிகர்கள் மீது எனக்கு அதிகமான பாசம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள துரசனை, உலக சினிமாவுடன் போட்டி போடும் அளவுக்கு இருக்கின்றது. கதை, கதைக்களம் இவைகளை ரசித்துப் பார்க்கும் தனிமை தமிழ் ரசிகர்களுக்கு இருக்கின்றது. வரும் காலங்களில் என் நடிப்பு மக்களை சந்தோசப்படுத்தும் அளவுக்கு கண்டிப்பாக இருக்கும் என்பதை இந்த இடத்தில் தெரிவித்து கொள்கிறேன்.

பல நாட்களாக என் மனதில் சொல்ல வேண்டிய விஷயம் ஒன்று இருக்கின்றது. அது என்னவெனில், தமிழ்ப்படங்களை திருட்டு விசிடி இணையதளத்தில் வெளியிடுவது. மனிதனாக பிறந்த அனைவருக்கும் பணம் முக்கியமான பொருள்தான். ஆனால் அடுத்தவன் உழைப்பை திருடி சம்பாரிப்பது சரி இல்லை. எங்கள் சினிமா துறையில் இருக்கும் கஷ்டத்தைப் புரிந்து கொள்ளுங்கள். என் கருத்துகளை தி கோவை மெயில் பத்திரிகையில் சொல்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் சினிமாவின் வெற்றிப் பயணத்தில் என் வாழ்க்கையும் இருக்கும் என்று சொல்லிக் கொண்டு விடை பெறுகிறேன். வாழ்க தமிழ், நன்றி வணக்கம்.

– பாண்டிய ராஜ்