இது ஆரம்பம் தான்…

சினிமாவை இரசிப்பதற்கும் அதன் மீது வெறித்தனமான அன்பு வைத்திருப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. பல வருடங்களாக சினிமா நட்சத்திரங்கள் மீது வெறித்தனமான அன்பு வைத்திருக்கும் ரசிகர்களை தமிழ் சினிமா சந்தித்து வருகிறது. எம்ஜிஆர், சிவாஜியில் ஆரம்பித்து விஜய், அஜித் வரைக்கும். எம்ஜிஆர் காலத்தில் அவர் படங்கள் ரிலீஸ் ஆகும் போது முதல் நாள் திரையரங்கத்துக்கு சென்று டிக்கெட் வாங்குவதற்கு காத்து கிடைப்பார்கள். கூட்ட நெரிசலில் இறந்து போனவர்களும் உண்டு.

இது எல்லா மொழி சினிமாக்களிலும் நடந்தது. ஆனால் என் தலைவனை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்ற எண்ணத்தோடு பல இரசிக பெருமக்கள் வாழ்ந்து வந்தனர். காலம் கடந்தது. ஹிந்தி சினிமாமீது தமிழ் ரசிகர்களுக்கு ஒரு தனிப்பட்ட மோகம் வர ஆரம்பித்தது. 1976 இல் தமிழ் மக்களும் ஹிந்தி சினிமாவைப் பார்த்துப் பழகியதால், அதே மாதிரியான படங்கள் தமிழில் வந்தால் ரசிக்கலாம்னு ஒரு எண்ணம் இருந்த பொழுது,  இளையராஜா என்ற இசை மாமேதை தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து இந்தியா சினிமாவையே தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார்.

பிறகு ரஜினி, கமல் என்ற இரண்டு பெரிய திரையுலக ஆளுமைகளின் ஆதிக்கம் ஏற்பட்டது. இரண்டு ஜாம்பவான்கள் ஒரு தனிப்பட்ட கதைக்களத்தில் சினிமா பாதைகளை அமைத்துக் கொண்டு பயணிக்க ஆரம்பித்தர். இது தொடர்ந்து கொண்டு இருக்கும் பொழுது இளம் சமுதாயத்துக்கு நாம் இடம் கொடுக்க வேண்டும் என்று முடிவு எடுக்கிறார்கள் ரஜினி, கமல். அந்த சமயத்தில் தான் விஜய், அஜித் சினிமா உலகில் வெற்றி பெறுவோமா இல்லையா என்ற மனக்குழப்பத்தோடு தமிழ் சினிமாவில் நுழைந்தனர்.

இருவரும் தங்களுடைய அனைத்துத் திறமைகளையும் வெளிக்கொண்டு வந்து பல படங்கள் நடித்த வண்ணம் இருந்தனர். ஆனால் எதுவும் கைகொடுக்கவில்லை.

ஆனால் அவர்களின் திறமை காரணமாக, அவர்கள் தமிழ் சினிமாவின் சிம்மாசனத்தில் உட்கார்ந்தனர். தமிழ் ரசிகர்கள் அனைவரும் விஜய், அஜித் என்ற நட்சத்திரம் பின்னால் போகும் அளவுக்கு, அவர்களின் உழைப்பு இருந்தது. இத்தருணத்தில் அஜித்க்கு மிகப்பெரிய சறுக்கல் ஏற்பட்டது. தமிழ்நாட்டின் பல இடங்களில் விஜய், அஜித் ரசிகர்களுக்கு நடுவில் பிரச்னை ஏற்பட்டது. அந்த சமயத்தில் அஜித்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

அஜித்குமார் அடிக்கடி கார் பந்தயத்திற்கு சென்று விடுகிறார். இவரை நம்பி தயாரிப்பாளர்கள் ஆகிய நாங்கள் பணம் போட்டு ஏமாந்து போகிறோம் என்று பல குறைகள் அஜித்தின் மேல் வைக்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போல், அஜித் நடித்த ஜனா, ஆஞ்சநேயா, பரமசிவம், ஆழ்வார் உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இனிமேல் அஜித் சினிமா பயணம் முடிந்தது என்றும் கூட பலர் கூறினர். மேலும், அஜித்தின் உடல் எடையை கேலி, கிண்டல் செய்தனர். அவருக்கு நடிப்பு வரவில்லை என்று பல இடங்களில் பேச ஆரம்பித்து விட்டனர்.

ஆனாலும் ‘தல’ ரசிகர்கள் இதற்கெல்லாம் சோர்ந்து போகவில்லை. எங்கள் தல எப்படியும் மறு அவதாரம் எடுப்பார் என்று நினைக்கும் போது, பல நல்ல கதைகளைத் தட்டி கழிக்க ஆரம்பித்தார். பிறகு ரஜினி நடித்த பில்லா படத்தை புது வடிவத்தில் எடுக்க முடிவு செய்தார்கள். வெற்றிகரமாக பில்லா நடித்து முடித்த பிறகு அஜித் கூறியது, இது வெறும் ஆரம்பம் தான் என்றார். தமிழ் சினிமா அஜித்தின் வெற்றியைப் பாராட்ட ஆரம்பித்தது. அதன்பிறகு அவருக்கு இதுவரைக்கும் ஏறுமுகம்தான்.

அஜித் ரசிகர் என்று சொல்லிக் கொள்ளும் சிம்புவுக்கும், கடந்த சில வருடங்களாக அஜித்க்கு என்ன நடந்ததோ அதேபோல சில விஷயங்கள் அரங்கேறின. அவர்மீது தயாரிப்பாளர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள், படப்பிடிப்பு தளத்துக்கு சரியாக வருவதில்லை, உடல் எடை ஏறிவிட்டது என்று பல விஷயம் சிம்புவை சுற்றி அமைந்து இருக்கின்றது. ஆனால் அஜித்தைப்போல் சிம்பு தனக்கென்று ஒரு இடம் பிடிப்பாரா என்று நாம் எல்லாரும் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். தன்னம்பிக்கையை விட முயற்சி முக்கியம். இதை சரியாக கையாள்பவர்கள் தமிழ் சினிமாவில் வெற்றியின் உச்சத்தைத் தொடுவார்கள்.

– பாண்டிய ராஜ்.