
அண்மையில் சிவப்பிரகாசம் என்பவர் பழனிக்குப் பாதயாத்திரை சென்று கொண்டிருந்த போது நிகழ்ந்த எதிர்பாராத சாலை விபத்தில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நெருக்கடி நிலைக் கண்காணிப்புக் குழுவும் நரம்பியல் மருத்துவர்களும் இணைந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்ட போதும் மூளையில் அடிபட்டிருந்ததால் அவர் குணமடைய இயலாமல் மூளைச்சாவு அடைந்தார். மூளையில் ஏற்படும் பாதிப்புகள் பற்றிக் கண்டறியும் ‘அப்னோ டெஸ்ட்’ பரிசோதனைகளைத் தொடர்ந்து மேற்கொண்ட மருத்துவர் குழு இறுதியில் அவர் மூளைச்சாவு அடைந்ததை உறுதி செய்தனர். சிவப்பிரகாசத்தின் நிலையையும் உடல் உறுப்புதானம் பற்றியும் அறிந்த குடும்பத்தினர் அவரது உறுப்புகளைத் தானமாக வழங்க முன்வந்தனர். சிவப்பிரகாசத்தின் கல்லீரல், சிறுநீரகம் மற்றும் கண்கள் ஆகியவற்றைத் தானமாக வழங்குவதன் மூலம் மற்றவர்களின் வாழ்வில் நன்மை செய்ய முடியும் என்பதால் உறுப்பு தானத்துக்கான தமிழக அமைப்பின்(TRANSTAN) அனுமதி பெறப்பட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் இரு நோயாளிகளுக்கு அவரது கல்லீரலும் சிறுநீரகமும் பொருத்தப்பட்டன. கண்கள் கோவையில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிக்குப் பொருத்தப்பட்டது.
எதிர்பாராத விபத்துகளால் மனிதர்கள் மூளையில் அடிபட்டு மூளைச்சாவு அடையும் போது அவர்களது உடல் உறுப்புகளைத் தானமாக வழங்குவதால் பலரது உயிரைக் காப்பாற்றவும் மறுவாழ்வு பெறவும் உதவ முடியும் என்பதால் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்குவது குறித்து மக்கள் அறிந்திருப்பது அவசியமானது.