நெகடிவ் ரோலில் நடிக்க ஆசை

தற்போது தமிழகத்தில் வீட்டில் உள்ள பெண்கள் எல்லோரும் ரசித்து பார்க்கக்கூடிய விஷயம் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகும் நாடகம். காலை 9:30 மணிக்கு தொடங்கி இரவு 10:30 வரை பெண்களைக் கவரும் விதத்தில் நாடகங்கள் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கின்றன. இயக்குநர் திருமுருகன் ‘மெட்டி ஒலி’, ‘நாதஸ்வரம்’ போன்ற நாடகங்களை இயக்கியவர்.

இவர் எடுக்கும் நாடகத்தில் பெண்களுக்கு எப்போதும் முதல் இடம் கொடுக்கக் கூடியவர். திருமுருகன் தற்போது எடுத்துக்கொண்டு இருக்கும் ‘‘குல தெய்வம்’’ நாடகத்தில் அறிமுகமான  ஸ்ரீ பிரியா நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்கள்  உங்களுக்காக.

‘‘வணக்கம். என்னை நீங்கள் எல்லோரும் குலதெய்வம் நாடகத்துல பார்த்திருப்பீங்க. எனக்கு சிறு வயதில் இருந்தே நடிக்கணும் என்கிற ஆசை இருந்தது. ஆனால் அதைப் பற்றி நான் சிந்திக்காமல் என் வழியில் பயணித்துக் கொண்டு இருந்தேன். நான் புதுக்கோட்டை பொண்ணு.

எங்க ஊருல இருக்கும் பெண்களுக்கு வீரமும் அறிவும் அதிகம்னு சொல்லுவாங்க. அது எனக்கும் இருந்தது. அதனால் நடிக்க வேண்டும் என்று உறுதியாக முடிவு எடுத்தேன். அதற்காக சில நடிப்புப் பயிற்சிகளை எடுத்துக் கொண்டு இருக்கும்போது, இயக்குநர் திருமுருகன் எடுக்கும் சீரியலில் நடிக்க அழைத்தனர்.

முதலில் நான் அங்கு போகும்போது மனதில் ஒரு பயத்துடன் சென்றேன். ஆனால் அங்கு சென்றவுடன் எப்படி நடிக்க வேண்டும். வாழ்க்கையில் இருந்துதான் நடிப்பு வருகின்றது என்பதை எனக்கு உணர வைத்தவர் திருமுருகன் சார்.

மேலும், என்னுடன் நடித்த சக நடிகர்களும் என்னை ஊக்குவித்தார்கள். நான் என்னை முழுமையாகப் புரிந்து கொண்ட தருணம் என்றால் அது குலதெய்வம் சீரியல் நடிக்கும்போதுதான். நான் நடிக்க ஆரம்பித்ததும் என்னை எல்லாரும் பாராட்டினர். இது என்னை அடுத்த கட்டத்துக்கு எடுத்த செல்ல உறுதுணையாக இருந்தது.

நட்பு குறித்து கூறவேண்டு மென்றால், என் பள்ளிப்பருவத் தோழி காயத்ரியைக் குறித்து கூற வேண்டும். என் சந்தோசத்தையும், கஷ்டத்தையும் எப்பவும் அவளிடம் சொல்லி என் மனக் குறைகளை தீர்த்துக் கொள்வேன்.

என் அம்மா, அண்ணன், தங்கை, தம்பி இவர்கள் அனைவரும் என்னைப் புரிந்து கொண்டு எனக்குள் இருக்கும் திறமையைக் கண்டு வெற்றி பெற வேண்டும் என்று எனக்கு பல விதத்தில் உதவியாக இருந்து வருகிறார்கள்.

சில சமயங்களில் எனக்கு கோபம் வருவதுமுண்டு. காரணம், பெண்களுக்கு நடக்கும் பிரச்னைகளை பார்க்கும்போது, நம் வீட்டில் ஒரு பெண்ணுக்கு பாலியல் பலாத்காரம் ஏற்பட்டால்தான் நாம் கவலைப்பட வேண்டுமா? ஒவ்வொரு பெண்ணுக்கு நடக்கும் அநீதிகளைக் கண்டிப்பாக நாம் எல்லோரும் தட்டிக் கேட்க வேண்டும். சட்டமும் தண்டனையும் கடுமையானால் தான் நமது பெண் சமுதாயம் தலை நிமிர்ந்து நிற்கும் என்பது என் கருத்து.

வரும் காலங்களில் நான் சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகின்றேன். எனக்கு எப்பவும் நெகடிவ் ரோலில் நடிக்க மிகவும் ஆசை. அந்த மாதிரியான ரோல் கிடைக்கும் தருணத்தில் என் திறமையைப் பற்றி நீங்களே சொல்வீர்கள். வாழ்கையில் சில தருணங்கள் சவாலாக இருந்தால், அதை இரசித்து போராடுங்கள் என்று சொல்லிக் கொண்டு விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்’’.

– பாண்டியராஜ்