தர்மம் தான் உலகை இயக்குகிறது!

இந்தியத் தொழில் வர்த்தகசபை கோவை சார்பில் “ஜி.கே. சுந்தரம் விருது” வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக சுந்தரம் பாஸ்டெனர்ஸ் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா கலந்துகொண்டார்.

கோவை இந்திய வர்த்தக சபைத்தலைவர் வனிதா மோகன் வரவேற்றார். சிறந்த சேவைக்கான விருதை ஆர்.கே. போட்டோ சென்டர் உரிமையாளர் கே.மருதாசலத்திற்கும், சிறந்த வர்த்தக பணிக்காக தி சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குநர் டி.கே.சந்திரனுக்கும் மற்றும் சிறந்த தொழில் நிறுவனத்திற்காக பண்ணாரி அம்மன் குழுமத் தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் சுரேஷ்  கிருஷ்ணா கூறுகையில்,

‘பண்டைய காலத்தில் பாண்டிய நாட்டு அரசன், இளவரசர்களை வெளிநாடு சென்று அங்குள்ள வணிகர்களுடன் சேர்ந்து வணிகம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். அப்பொழுதுதான் ஒரு நாட்டிற்கு வணிகம் எவ்வளவு முக்கியம் என்று தெரியும்  என்று கூறினார். அரசிலங்குமரர் இளம்பெருவழுதி என்பவர் சங்கத்தமிழில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்.

அவர்தம் 16 வயதிலேயே சங்கத்தில் சேர்க்கப்பட்டார் என்றால் அவரது புலமை எப்படி இருக்கும் என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அவர் தன் சிறு வயதில் கப்பலில் ஏறி வெளிநாட்டிற்கு செல்லும்பொழுது கப்பல் கவிழ்ந்து அந்த குமரர் இளம்வழுதி மாண்டார்.

புலமை வாய்ந்த இளம்பெருவழுதி எவ்வளவோ கவிதை எழுதியிருந்தும் இன்று நான் புறநானூற்றில் அவர் எழுதிய கவிதையை இந்த இடத்தில் சொல்ல விரும்புகிறேன். இந்த கவிதை ஜி.கே.சுந்தரம் அவர்களுக்கு பொருத்தமானதாக இருக்கும். இது இளம்பெருவழுதி 2130 வருடத்திற்கு முன் எழுதியது:

உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்

அமிழ்தம் இயைவதாயினும், இனிதுஎனத்

தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;

துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்

புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்

5 உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;

அன்ன மாட்சி அனையராகித்

தமக்கென முயலா நோன்தாள்

பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.

இந்திரனுக்கு அமிழ்தம் கிடைத்தாலும், அது இனிமையானது என்றுதனித்து உண்ண மாட்டார். எந்த விதமான கஷ்டங்கள் வந்தாலும் சரி, எந்தவித தயக்கமும் இல்லாமல், அதை சமாளிக்கும் திறமை இருக்கிறது. புகழ்வரும் என்றால் நாட்டிற்கும், மக்களுக்கும் உயிரையும் கொடுப்பர். உலகையே உனக்குக் கொடுக்கிறேன் என்றால், அதனால் பழி வரும் என்று நினைத்தால் அதன் பக்கத்தில்கூட போக மாட்டார்கள், மனம் தளர மாட்டார்கள், பயப்பட மாட்டார்கள். தனக்காக பாடுபடாமல், மற்றவர்களுக்குக்காக உழைப்பவர்கள் இருப்பதால் தான், எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் தருமத்திற்கு கட்டுபட்டுதான் இந்த உலகம் ஓடிக்கொண்டிருக்கிறது என்று 16 வயது பையன் நமக்கு சொல்லியிருக்கிறார். அதன் கவிதையின் சாரம் ஜி.கே.சுந்தரம் அவர்கள்.

அதனால் ஜி.கே.சுந்தரம் அவர்களுக்கு நாம் அனைவரும் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம். அவருடைய பெயரில் இந்த சிறப்பு விருதினை பெற்றவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

மேலும், சிறந்த நிறுவனம் என்பதற்கு பொருள், அதனுடைய தரமாகவும் இருக்கலாம், அதிகப்படியான எண்ணிக்கையாகவும் இருக்கலாம். இதில் அளவிடக்கூடிய, அளவிடமுடியாத விஷயம் என இரண்டு வகையாக பிரிக்காலம். நீங்கள் செய்த ஒரு செயலானது, தொடக்கம் முதல் இறுதி வரை கண்டுபிடித்து விட முடியுமானால் அது அளவிடக்கூடியது. அளவிடமுடியாதது என்றால், நீங்கள் செய்த செயலை அடடே! என்று சொல்லும் அளவிற்கு உணரச் செய்தல். ஒரு நிறுவனத்திற்கு முக்கியமானது சிறந்த முறையில் செயல்படுவது மற்றும் வெளிப்படுத்துவது.

ஒரு நிறுவனத்தை சிறந்த முறையில் நடத்துவது, அதனை சரியான தருணத்தில் வெளிப்படுத்துவது, இவை இரண்டிற்கும் முக்கிய பங்காற்றிட தொழிலாளர்கள் முக்கியம். அதில் அவர்களின் பங்களிப்பு முக்கியம். ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு, முயற்சி, ஞானம் இருந்தால் மட்டுமே அந்நிறுவனத்தை சிறந்த நிறுவனமாக்க முடியும். பணம் இருந்தால், புதிய தொழில்நுட்பங்களை, நல்ல இயந்திரங்களை, ஏன் ஒரு தலைநகரைக் கூட வாங்க முடியும்.

ஆனால் ஒரு முதலாளிக்கு ஒத்துழைப்பும், ஊக்குவித்தலும் கொடுக்கக் கூடிய தொழிலாளியை வாங்கவே முடியாது. இதற்கு ஒரு சிறந்த உதாரணம், ஒருவர் என்னிடம் கூற கேட்டேன். முனிவர் காஞ்சி வர்மாச்சாரி தன்னுடைய சிஷியனிடம் காலை 5 மணிக்கு என்னை எழுப்பி விடு, அதிகாலை பூஜை செய்ய வேண்டும் என்று கூறி உறங்க சென்று விட்டாராம். மறுநாள் அந்த சிஷ்யன் சொன்ன நேரத்தில் எழுப்பாமல் தூங்கிவிட்டார்.

திடீரென்று அந்த சிஷ்யன் எழுந்து பார்க்கும் பொழுது முனிவர் பூஜை செய்து கொண்டிருந்தாராம். அப்பொழுது அந்த சிஷ்யன் தன் குருவிடம், எப்படி எழுந்தீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு குரு, டி.வி.எஸ் பஸ் சென்றது அதை வைத்து தெரிந்து கொண்டேன் மணி 5 என்று, எனக் கூறினார். இவ்வாறு நாங்கள் ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காமல் சிறப்பாக பணியாற்றினோம். அதனால் தான் இன்று உள்நாடு வெளிநாடு என 28 கிளைகளை உருவாக்க முடிந்தது.

நம்மிடம் பணியாற்றும் பணியாளர்களுக்கெல்லாம் நாம் இன்னொரு பெற்றோர் மாதிரி. அவர்களுக்கு நாம் வேண்டியதை செய்தால் போதும். காரணம் ஒவ்வொரு தொழிலாளியும் அந்நிறுவனத்திற்கு ஒவ்வொரு தூண். அவர்கள் இல்லை என்றால் நல்ல தரமான நிறுவனம் என்ற அங்கீகாரம் கிடைக்காது. 1966ல் டி.வி.எஸ் நிறுவனத்தை ஆரம்பித்தேன்.

அன்று எங்களிடம் பணியாற்றியவர்கள் எல்லாம் அவ்வளவாக படிக்கவில்லை. ஓட்டுநர் பயிற்சியிலிருந்து, எலக்ட்ரிசியன் வேலைகள் வரை அனைத்தும் கற்றுக் கொடுத்தோம். அவர்களும் அதனை சரியாக செய்தனர். டிவிஎஸ் பஸ் கடந்து செல்கின்றது என்றால், மணியை சரியாக சொல்லிவிடுவர். அவ்வளவு நேர்த்தியாக, கட்சிதமாக பணியாற்றினோம். இவை அனைத்திற்கும் காரணம் தொழிலாளிகள் மட்டுமே. எனவே ஒரு சிறந்த நிறுவனம் என்ற பெயர் வாங்குவதற்கு நல்ல தொழிலாளி அமைந்தால் போதும் என்று கூறினார்.

 

தோல்வியடையாதவர் வெற்றியடையமாட்டார்:


– எஸ்.வி.பாலசுப்ரமணியம், தலைவர், பண்ணாரி அம்மன் குழுமம்

‘இந்தியத் தொழில் வர்த்தகசபை கோவை தொழிலதிபர்களுக்கும், தொழில் புரிவோருக்கும் ஒரு மேடையாக அமைந்திருக்கிறது. இந்த விருது சாதாரண விருது அல்ல. இளம் தொழிலதிபர்களை ஊக்குவிக்கும் விதத்தில் இவ்விருது உள்ளது. மேலும், கோயம்புத்தூர் நகரம் தொழிலதிபர்களால் உருவான நகரம் என்றே சொல்ல வேண்டும். உதாரணமாக, சண்முக செட்டியார், சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார், எஸ்.ஆர்.பொன்னுசாமி செட்டியார், ஜி.டி.நாயுடு, ஜி.கே.சுந்தரம், அவினாசிலிங்க செட்டியார், டாக்டர் என் மஹாலிங்கம் இன்னும் பலர்.

சாதாரண ஒரு தொழிலாளியை எந்த முதலாளியும் நீ தொழில் தொடங்கு என்று சொல்ல மாட்டார். ஆனால் டாக்டர் என்.மகாலிங்கம் என்னிடம் நீ ஒரு தொழில் தொடங்கு என்று கூறினார். உனக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நான் செய்கிறேன் என்றார். ஒரு தொழில் தொடங்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல. முதலில் என்னை அவரது நிறுவனத்திற்கு சேர்மேனாக இருக்கச் சொன்னார். அத்துடன் அனைத்தையும் கற்றுக் கொடுத்தார். வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் இன்று இந்த நிலையை அடைந்துள்ளேன். எதுவும் சுலபமாகக் கிடைப்பதில்லை. தோல்வியடைபவன் மட்டுமே வெற்றிகாண முடியும். சமீபத்தில் தி சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குநர் டி.கே.சந்திரன் மற்றும் அவருடைய சகோதரரைச் சந்தித்தேன். அப்பொழுது சென்னையில் உள்ள சென்னை சில்க்ஸ் கிளையில் நடந்த தீ விபத்து குறித்து விசாரித்தபோது, ஆமாம், இது போன்ற சம்பவங்கள் எதிர்பார்க்க வேண்டியதுதான். அக்கட்டிடத்தை இடித்து புதிய கட்டடம் கட்ட சொல்லியிருக்கிறேன் என்று அவரிடம் இருந்து நேர்மறையான வார்த்தைகள் மட்டுமே தென்பட்டன.

முடியாதது என்று எதுவுமே இல்லை. எனவே தோல்வியடைந்தால் துவண்டு விடாமல் தொடர்ந்து முயற்சிப்பவனுக்கு மட்டுமே வெற்றிகிடைக்கும் என்பதை அவர்களைப் பார்க்கும் போது தெரிகிறது. மேலும், கோவை இந்தியத் தொழில் வர்த்தகசபைத் தலைவர் வனிதாமோகன் பற்றி சொல்ல வேண்டுமானால், அவர் ஒரு சிறந்த வழிகாட்டி என்றே சொல்லுவேன். காரணம், அவருடைய திட்டங்களையும், அதற்கான செயல் பாடுகளையும் திறம்பட செய்கிறார். அவர் பெண்களுக்கு மட்டுமல்ல, இந்த சமூகத்திற்கே முன்மாதிரியாகத் திகழ்கிறார். ஒரு விஷயத்தைக் கனவுகண்டு செயலாற்றினால் வெற்றிகாணலாம்’ என்றார்.

 

ஆர்வம், ஊக்கமும் இருந்தால் சாதிக்கலாம்

–  கே.மருதாசலம், நிறுவனர், ஆர்.கே.போட்டோ சென்டர்.

‘இந்த மதிப்புமிக்க ஜி.கே.சுந்தரம் விருதினை எங்கள் நிறுவனத்திற்கு (ஆர்.கே.போட்டோ சென்டர்) வழங்கத் தேர்ந்தெடுத்தமைக்கு கோவை இந்தியத் தொழில் வர்த்தகசபைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் போட்டோ சென்டர் ஆரம்பித்ததற்கு முக்கிய காரணம் ஜி.கே.சுந்தரம் அவர்கள்.

என் அப்பாவும், ஜி.கே.சுந்தரம் அவர்களும் நெருங்கிய நண்பர்கள். இராஜாஜி காலத்தில் இருந்தே என் அப்பாவும், அவரும் நெருங்கிய நண்பர்கள். நட்பு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இணைந்து செயல்பட்டவர்கள். என் அப்பாவைப் பார்க்க அவர் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவார். அப்பொழுது அவரிடம் நான் எடுத்த புகைப்படங்களைக் காட்டுவேன். பாராட்டுவதோடு மட்டுமல்லாமல் நீ ஒரு போட்டோகிராபி கிளபில் சேர்ந்து கொள்ளலாமே என்று ஊக்குவித்தார்.

அவரின் அறிவுரை கேட்டு நானும், என்னுடைய சகோதரரும் பல புகைப்படக் கண்காட்சியில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றோம். அதன்மூலம் நிறைய அனுபவங்களும் கிடைத்தன. பிறகு போட்டோ சென்டர் ஆரம்பித்தோம்.நான் போட்டோ சென்டர் ஆரம்பித்தபொழுது, கேமரா,போட்டோ என்பது அரிதான விஷயம். அன்றிலிருந்து இன்று வரை எடுத்த ஒவ்வொரு புகைப்படங்களும் சிறந்தவைதான். எதிலும் ஆர்வம், ஊக்கமும் இருந்தால் சாதிக்கலாம்’ என்றார்.

 

சமுதாயம் கொடுப்பதை சமுதாயத்திற்கே கொடுக்கிறோம்

– டி.கே.சந்திரன், நிர்வாக இயக்குநர், தி சென்னை சில்க்ஸ்.

‘அடிப்படையில் நான் ஒரு நெசவாளி குடும்பத்தைச் சார்ந்தவன். ஒரு குடும்ப வியாபாரம் எப்படி இருக்க வேண்டும் என்பதை டி.வி.எஸ்.குரூப் நிறுவனத்தைப் பார்த்துக் கற்றுக்கொண்டேன். என் சிறு வயதிலிருந்தே இவர்களுடைய வளர்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஏ.பி.டி யும் அதுபோல்தான். எங்களுடைய தி சென்னை சில்க்ஸ், ஸ்ரீ குமரன் தங்கமாளிகை பற்றி எல்லோரும் அறிந்ததே. இதைத் தவிர ஏற்றுமதியும் சிறந்த முறையில் செய்ய கடவுள் அருள் கிடைத்திருக்கிறது. வியாபாரத்தில் கிடைக்கின்ற பணம் சமூகத்தின் மூலம் கிடைக்கப் பெற்றவையே. அவற்றை வைத்து சமூகத்திற்கு நற்பணியாற்றிட பல சமூக சேவைகள், கல்வி அறக்கட்டளைகள் போன்றவை வழங்கி வருகிறோம்.

கோவை இந்திய தொழில் வர்த்தகசபை ஒவ்வொரு முறையும் தொழில் முனைவோருக்கான கூட்டம் நடத்தி வருகிறது. இதனால் அத்துறையைப் பற்றி பல நேர்மறை, எதிர்மறை கருத்துக்கள் வெளிப்படும். இது தொழில்முனைவோருக்கு ஒரு வேகத்தையும், உற்சாகத்தையும் அளிக்கின்றது. தற்போது உள்ள கோவை இந்திய வர்த்தக சபை பழைமையானது. இச்சபை தோன்றிய காலத்திலிருந்து இன்றைய தலைமுறை வரைக்கும் திறம்பட வழிகாட்டி ஊக்குவித்து வருகின்றனர். டி.வி.எஸ்., டாடா நிறுவனங்களைப் போல எங்களுடைய நிறுவனமும் பெரிய கார்ப்பரேட் நிறுவனமாக வளர்ந்திட உங்களுடைய அன்பும், ஆதரவும் வேண்டும்’ என்றார்.

– மேகலா நடராஜ்.