கோவையில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா – சொர்க்க வாசல் திறக்கப்பட்டது!

  கோவை மாவட்டத்தில் உள்ள உக்கடம் , பாப்பநாயக்கன் பாளையம் , காரமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெறும். இதன்படி இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு உற்ச்சாகத்துடன் தொடங்கியது.  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதம் என்ற சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.

இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கோமாதா பூஜை, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாதசாமி சேஷ வாகனத்தில் எழுந்தருளி உட்பிரகார புறப்பாடு வந்து, அனுமன் சன்னதி முன் வீற்றிருந்தார் அங்கு சிறப்பு பூஜைக்கு பின் அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்க வாசல் கதவு திறக்கப்பட்டது.

பின்னர் அதிகாலை 5.45 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாத சாமி சேஷ வாகனத்தில் சொர்க்க வாசல் வழியாக வெளியே வர, வாசல் முன்பு திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், ராமானுஜர் எதிர்கொண்டு சேவிக்க பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷமிட்டனர். தொடர்ந்து  ஸ்ரீ அரங்கநாதசாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்அளித்தார்