பன்றிக்காய்ச்சலால் தொடர் மரணம் – மனித உயிர்கள் மலிவானதா? -முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கண்டனம்

கோவை அரசு மருத்துவமனையில் பன்றி மற்றும் டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரையில் 83 பேர் பலியாகி உள்ளனர். நாள்தோரும் இந்த எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. ஏழை எளிய மக்களின் ஒரே நம்பிக்கையான அரசு மருத்துவமனையில் நடைபெறும் இதுபோன்ற உயிரிழப்புகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. உடனயாக மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என கோவை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை அரசு மருத்துவமனையில் பன்றி மற்றும் டெங்கு காய்ச்சலின் காரணமாக இதுவரை 80க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இது கோவை மாவட்ட மக்களை மட்டுமல்லாமல் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இக்காய்ச்சலின் காரணமாக அன்றாடம் இரண்டு அல்லது மூன்று பேர் என தொடர் மரணம் நிகழ்ந்து வருவது கவலையளிக்கிறது. அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லததால் மரணம் ஏற்படுகிறதா. இக்காய்ச்சலின் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முடிந்தவரை பணத்தை கறந்துவிட்டு முடியாத நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணம் நிகழ்கிறதா என்பது இதுவரை புலப்படாத மர்மாமாகவே உள்ளது. எதுவாகிலும் மனித உயிர்கள் மலிவாக பலியாவதை ஒரு போதும் ஏற்க முடியாது.

அரசு மருத்துவமனையில் இக்காய்ச்சலினால் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தீவிரமான சிறப்பு சிகிச்சை அளிப்பதும். தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டவர்கள் யார்யார் என்பதை தீவிரமாக கண்கானித்து தனிக்கை செய்ய வேண்டும். டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சையளிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும். மேலும் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம், மாநகர நிர்வாகம் சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாக்க தீவிரமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கொசு மருந்து தெளிப்பது மட்டுமே தீர்வு என நினைக்காமல் குடியிருப்பு பகுதியில் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டிருப்பவர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய சிகிச்சையளிக்க மாவட்ட நிர்வாகம் அரசு மருத்துவமனையின் நிர்வாகத்தோடு இனைந்து பணியாற்ற வேண்டும். சாதாரண ஏழைஎளிய உழைப்பாளி மக்களுக்கு அரசுமருத்துவமனைதான் நம்பிக்கை என்கிற நிலையில் தொடர் மரண பீதியால் இம்மக்களுக்கு நம்பிக்கையற்று போகிற அபாயம் உள்ளது. மாநில அரசு உடனடியாக போதிய வசதிகளை கோவை அரசு மருத்துவமனைக்கு ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக் கொண்டு உள்ளார்.