உலகியல் மாற்றத்திற்கான அறக்கருத்துக்களை எழுத்தாளர்கள் உணர்த்துகின்றனர் – எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்

கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில், “பண்பாடு மரபும் மாற்றமும் தேசியக் கருத்தரங்கம் மற்றும் பாரதி விழா” நடைபெற்றது.

நிகழ்விற்குக் கல்லூரி முதல்வர் கீதா முன்னிலை வகித்து, தமிழ்ச்சமூகத்தின் தொன்மை மரபுகளை எல்லாம் தற்கால இளந்தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும் எனக்கூறி நிகழ்வு சிறக்க வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் கலந்து, தமிழிலக்கியப் பண்பாட்டில் உள்ள விழுமியப்பகிர்வுகளை எல்லாம் எடுத்துரைத்து, எழுத்தாளர்களின் மூலம் உலகியல் மாற்றங்களுக்கான அறக்கருத்துகள் உணர்த்தப்படுகின்றன என்பதை வலியுறுத்தினார். சூழலியல் மாற்றங்களின் தன்மைகளை எல்லாம் எடுத்துக்காட்டி, இன்றைய கால இளைஞர்கள் இயற்கையை நேசித்து, தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தின் மீதான பொறுப்புணர்வுடன் செயல்பட்டு தமிழர் பண்பாட்டு அடையாளங்களை அறிந்து கொள்ள வேண்டும் என எடுத்துரைத்தார்.

தொடர்ந்து தமிழ்த்துறைத் தலைவர் அனுராதா தலைமையேற்று, தமிழினப் பண்பாட்டோடு தற்கால வாழ்வியல் சூழல்களை அமைத்துக் காட்டி உரை நல்கினார். இக்கருத்தரங்கில், நிகழ்விற்கான ஆய்வுக் கோவையைச் சிறப்பு விருந்தினர் வெளியிடக் கல்லூரி முதல்வர் பெற்று மகிழ்ந்தார்.

இந்நிகழ்வில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளம் பாரதி விருதுபெற்ற மாணவி மைதிலி தேவிக்குச் சிறப்புச் செய்யப்பெற்றது. மேலும், செம்மொழி மத்தியத் தமிழாய்வு நிறுவனத்தின் மூலம் நிதிநல்கை பெற்று நடத்தப்பெற்ற பேச்சுப் போட்டியில் பரிசு பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டன.

தமிழ்த்துறைப் பேராசிரியர் கோகுல்நாத் உரையெழுதி வெளியிட்ட பாரதியார் பல்கலைக்கழகப் பாடத்திட்டச் செய்யுள் திரட்டு நூல் இக்கருத்தரங்கில் வெளியிடப்பட்டது.

நிகழ்வில் வணிகவியல் துறையின் தகவல் தொழிற்நுட்பப்பிரிவுத் தலைவர் ஜி.சேதுராமன் , அலுவலக மேலாளர் வி.ரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

இதில்  500க்கும் மேற்பட்ட  மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.