‘படிப்பைவிட, தன்திறமையை உணர வேண்டும்’

தமிழ் சினிமாவில் அண்மைக்காலமாகத் திரைக்கு வரும் திரைப்படங்கள் மக்கள் மனதில் ஆழமாகப் பதியும் அளவுக்கு இருக்கின்றன என்பதால்  ஆச்சரியம் ஏதுமில்லை. அந்த வரிசையில் விஜய் சேதுபதி நடித்த ‘96’ படம் தற்போது பட்டிதொட்டி எங்கும் பேசும் அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது. அப்படத்தின் ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம் தனது திரையுலக அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

‘‘என் வாழ்க்கை மிகவும் அழகானது. தற்போது என்னைச் சுற்றி சந்தோசமும் நிம்மதியும் கொட்டிக் கிடக்கின்றன. இந்த அளவு சந்தோஷமாகப் பேசுவதற்கு காரணம், 96 படத்தின் வெற்றி. பள்ளிக் காலங்களில் எனக்கு ஓவியங்கள் வரைவது மிகவும் பிடிக்கும். வாழ்க்கைத் தத்துவத்தை நம்மைச் சுற்றி இருக்கும் ஓவியங்களில் பார்க்க முடியும் என்று நம்புபவன். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள்,  படிப்பைவிட, தனக்குள் இருக்கும் திறமையை உணர வேண்டும். அப்போதுதான் இந்த வாழ்க்கை அழகாகவும் காரணம் மிகுந்ததாகவும் அமையும்.

பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு சென்னை ஓவியக் கல்லூரியில் சேர்ந்தேன். இங்கு எனக்குள் இருக்கும் ஓவியக் கலையை பட்டை திட்ட மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கல்லூரிக் காலங்களில் இந்தியா முழுக்க சென்று புகைப்படம் எடுக்க வாய்ப்பு அமைந்தது. மக்கள் தங்கள் வாழ்வில் பல பிரச்னைகளை சந்தித்தாலும் அவர்கள் நம் நாட்டில் எந்த மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர் என்பதை அந்த பயணம் உதவியது. அப்போது நான் எடுத்த புகைப்படங்கள் என்னுள் பல மாற்றங்களை ஏற்படுத்தியது.

அப்போது ஃபிலிம் ரோல் கேமரா வைத்துத்தான் புகைப்படம் எடுத்திருந்தேன். பயணம் முடிந்து திரும்பியவுடன், ஃபிலிம்ரோலைக் கழுவிப் பார்த்த அந்த நிமிடம், நிச்சயமாக சினிமாவில் ஒளிப்பதிவாளராக ஆக வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் விதைத்து விட்டேன். அப்போது, எனது புகைப்படம் ஒன்று, ஜூனியர் விகடன் வார இதழின் கடைசிப் பக்கத்தில் வெளியானது. அதைப் பார்த்த ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் பாராட்டுக் கட்டுரை எழுதினார். இந்நிலையில் அவரை சந்திக்கும் சூழல் ஏற்பட்டது. அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்ட அவரிடம், ஒளிப்பதிவாளர் ஆக வேண்டும் என்றேன். யாரிடம் நிங்கள் பணியாற்ற ஆசைப்படுகிறீர்கள் என்றதற்கு, சந்தோஷ் சிவன், கே.வி.ஆனந்த் என்றேன். நீங்கள் அவர்களிடம் வாய்ப்பு கேளுங்கள், கிடைக்காதபட்சத்தில் என்னிடம் வாருங்கள் என்றார்.

 

அதன் பின் ஒரு வருடம் வாய்ப்புத் தேடி அலைந்தேன். பிறகு சாமுராய் படத்தின் ஒளிப்பதிவாளர் சேது ஸ்ரீராமிடம் சேர்ந்து பணியாற்ற ஆரம்பித்தேன். அவர் தமிழ்ப் படங்களுக்கு குறைவாகவே ஒளிப்பதிவு செய்து இருந்தாலும், பிற மொழிகளில் நிறைய பணியாற்றினார். அவற்றில் அவருடன் என் பயணம் தொடர்ந்தது. சந்தோஷ் சிவன் எடுத்த விளம்பரப்படங்களில் அவரிடம் பணியாற்ற எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. இன்னும் நான் கற்றுக்கொள்ள பல விஷயம் எனக்கு தேவைப்பட்டது.

இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேனனின் திரைப் படக்  கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டு அங்கு சேர்ந்தேன். அப்போது ராஜிவ், ஹிந்தி, தமிழ் என்று உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றும் தருணத்தில் ஏன் மீண்டும் படிக்க வேண்டும் என்றார். அதற்கு நான், உங்களிடம் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன் என்றேன். அதற்கு ஒரு காரணம் இருக்கின்றது. அவரது முதல் படமான பம்பாய் படத்தை பல முறை திரை அரங்கில் பார்த்தவன் நான். அவர் கல்லூரியில் படித்து முடித்த சில மாதங்களில் என் முதல் பட வாய்ப்பு அமைந்தது.

அது, நடிகர் ஜீவா நடித்த ரௌத்திரம். முதல் படம் என்ற காரணத்தால் என் முழு உழைப்பையும் கொட்டி வேலை பார்த்தேன். எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தவர் படத்தின் இயக்குநர் கோகுல். பிறகு ஆரோகணம், யாகாவாராயினும் நா காக்க, ஆண்டவன் கட்டளை, இவன் வேற மாதிரி கன்னட ரீமேக் சக்கரவியூகம் என தற்போது 96 என்று என் சினிமாப் பயணம் நகர்ந்து கொண்டு இருக்கிறது.

நடிகர் விஜய் சேதுபதி துணை நடிகராக இருக்கும் காலத்தில் இருந்து எங்களுக்குள் அழகான நட்பு இருந்து வருகிறது. அவருடன் ஆண்டவன் கட்டளை படம் பண்ணும்போது அவரின் திறமையைப் பார்த்து மெய்சிலிர்த்தேன். அது யதார்த்தம் மிகுந்த படம். அதற்காக என் ஒளிப்பதிவில் அதிக கவனம் செலுத்தி அந்தப் படத்தை எடுத்து முடித்தோம். படம் வெளியாகி பலரின் பாராட்டைப் பெற்றது. அந்த  வெற்றிக்குப் பின்னர் ‘96’ இல் நாங்கள் ஒன்று சேர்ந்து பணியாற்றியது அதிர்ஷ்டம். இது மறக்க முடியாத நிகழ்வு என்றும் சொல்லலாம்.

96 படம் மக்களின் பாராட்டை பெற்றதற்குக் காரணம் இயக்குநர் பிரேம்குமார். அத்துடன் விஜய் சேதுபதி. அந்த வெற்றியில் நானும் இருப்பது சந்தோஷம். இப்படத்தில், நாயகன்  புகைப்படம் எடுக்க பல மாநிலங்கள் செல்லும் பாடல் காட்சியை நாங்கள் படமாக்கிய விதம் மறக்க முடியாத அனுபவம். அதில் ஒரு காட்சியில், சேதுபதி வாயில் இருக்கும் ரொட்டியை மான் துள்ளி எழுந்து கவ்வி எடுக்கும் காட்சி மிகவும் தத்ரூபமாக படமாக்கப்பட்டது. அதோடு, மண் புயலுக்குள் சேதுபதி இயற்கையை ரசிக்கும் காட்சி. அதை நாங்கள் எடுத்து முடிப்பதற்குள் ஒரு வண்டி மணல் எங்கள் மேல் இருந்தது. இதுபோன்ற காட்சிகள் எடுக்கும்போது எங்களுக்கு பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. ஆனால் படம் பார்த்த பலரும் ஒவ்வொரு காட்சியையும் சொல்லிச் சொல்லி  பாராட்டும்போது மனதுக்கு சந்தோஷமாக உள்ளது. தற்போது தமிழ் சினிமா அழகான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. இதற்கு மக்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும். இயற்கையை நாம் இரசிப்பது இல்லை. ஆனால் நம் வாழ்க்கைப் பயணம் இயற்கைக்கு நடுவில்தான் பயணிக்கிறது. நாம் எப்போதும் ரசனை மிகுந்த வாழ்க்கையை வாழ வேண்டும்’’ என்றார்.

-பாண்டியராஜ்.

 

1 Comment

Leave a Reply

Your email address will not be published.


*