கின்னஸ் சாதனை படைத்த வியட்நாமின் கண்ணாடி பாலம்

வியட்நாமில் கடந்த மாதம் திறக்கப்பட்ட கண்ணாடி பாலம் உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது.

வியட்நாமில் உள்ள சான் லா பகுதியில் உள்ள வனப்பகுதிகளின் அழகை பார்த்துக் கொண்டே நடமாடும் வகையில் அங்கு கண்ணாடி பாலம் அமைக்க வியட்நாம் அரசு முடிவு செய்தது. கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த இந்த பணி முடிவடைந்து கடந்த மாதம் பாச் லாங் என்னும் அந்த கண்ணாடி பாலம் திறக்கப்பட்டது. இந்த பாலம் 2073 அடி நீளம் கொண்டது. தரை மட்டத்திலிருந்து 492 அடி உயரத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.

632 மீட்டர் பாக் லாங் எனப்படும் இந்த வெள்ளை டிராகன் பாலமானது 632 ​​மீட்டர் நீளமுள்ள தொங்கு பாலமாகும். இந்த பாலத்தில் உள்ள கண்ணாடிகள் 40 மில்லி மீட்டர் தடிமத்தில் உடையாத விதத்தில் வடிவமைக்‍கப்பட்டுள்ளது. இதில் ஒரே நாளில் 450 பேர் நடக்‍கலாம் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வியட்நாமில் திறக்‍கப்பட்டுள்ள இந்த பாலம், உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் என்ற கின்னஸ் சாத​னையை படைத்துள்ளது.

சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் இருக்‍கும் 1,726 அடி நீளம் கொண்ட கண்ணாடி பாலம்தான் உலகின் மிக நீளமான கண்ணாடி பாலமாக இருந்த நிலையில் அந்த சாதனையை வியட்நாம் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.