நேபாள விமான விபத்தில் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என தகவல்

நேபாள நாட்டின் தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 9 NAET என்ற சிறிய ரக பயணிகள் விமானம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து ஜோம்சோம் நகருக்கு ஞாயிறு காலை 9.55 மணியளவில் 4 இந்தியர்கள், 2 ஜெர்மனியர்கள், 16 நேபாளிகள் மற்றும் 3 விமான பணியாளர்களுடன் சென்றது.

இந்த விமானத்தின் பயண நேரம் 20 நிமிடங்கள் என்றிருந்த நிலையில், இடைப்பட்ட நேரத்தில் தரை இறங்குவதற்கு 5 நிமிடத்திற்கு முன்னதாக விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

உடனே விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமானத்தை தொடர்பு கொள்ள முயற்சித்தனர். இருப்பினும் அது பலனளிக்கவில்லை. இதனால் விமானம் இறுதியாக தொடர்பை இழந்த பகுதிக்கு மீட்புப் படையினரை நேபாள நாட்டு அரசு அனுப்பியது.

ஆனால் மீட்பு குழுவினர் விபத்து நடந்த இடத்தை அடைந்தபோது இரவு நேரம் என்பதால் விமானத்தின் நிலையைக் கண்டறிவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் மீண்டும், இன்று காலை முதல் மீட்பு பணிகள் தொடங்கியது.

விபத்து நடந்த இடத்திற்கு காடுகள் வழியாக சென்ற மீட்புக் குழுவினர் இதுவரை 14 உடல்களை மீட்டுள்ளனர். அவர்களின் உடல் நேபாள தலைநகர் காட்மண்டுவிற்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளதாக மீட்பு குழுவின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், விமானத்தின் கருப்புப் பெட்டியை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது

விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிக்கைக்காக காத்திருப்பதாக நேபாள நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் பதீந்திர மணி பொக்ரேல் தெரிவித்துள்ளார்.

விபத்து பகுதிக்கு கூடுதலாக மீட்புப் படையினர் அழைத்துச் செல்ல முடியாத அளவிற்கு அங்கு மோசமான வானிலை நிலவுவதாக நேபாள சிவில் விமான போக்குவரத்து செய்தி தொடர்பாளர் தியோ சந்திர லால் கார்ன் கூறியுள்ளார்.