பேரறிவாளன் நேற்று சிறையில்; இன்று வீட்டில்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளன் இன்று விடுதலை விடுதலையானார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் விடுதலை வழங்கி இன்று தீர்ப்பளித்துள்ளது. ஆளுநர், கால தாமதம் செய்ததால், அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 142 சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை தமிழக முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இந்தத் தீர்ப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளதாவது: நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து முழு விவரம் கிடைத்தவுடன், மற்ற 6 பேரின் விடுதலை குறித்து சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பேரறிவாளன் என்ற தனிமனிதனின் விடுதலையாக மட்டுமல்ல, கூட்டாச்சித் தத்துவத்துக்கும், மாநில சுயாட்சி மாண்புக்கு இலக்கணமாகவும் அமைந்து விட்ட இத்தீர்ப்பு மீண்டும் மீண்டும் வரலாற்றில் நினைவுகூரத்தக்கது என்றார்.

பேரறிவாளன் விடுதலை தீர்ப்பின் மூலம் மாநிலத்தின் உரிமை மிக கம்பீரமாக நிலைநாட்டப்பட்டுள்ளது. மாநில அரசின் கொள்கையில், அதன் முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என நீதியரசர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை களைய, எந்த எல்லைக்கும் சென்று போராடத் தயங்காதவர் அற்புதம்மாள். முப்பத்தொரு ஆண்டுகளுக்கு பின், சுதந்திர காற்றை சுவாசிக்கும் பேரறிவாளனுக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்டுள்ள விடுதலையின் மூலம், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயகுமார் ஆகிய மற்ற 6 பேருக்கும் விடுதலை கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்த முழு விவரம் கிடைத்தவுடன், மற்ற 6 பேரின் விடுதலை குறித்து சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.