கொங்குநாடு கல்லூரியில் முப்பெரும் விழா

கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும், சென்னை, சேவாலயா தொண்டு நிறுவனமும் இணைந்து நடத்திய மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு, செல்லம்மா பாரதி ரத வரவேற்பு, தமிழாசிரியர்களுக்கு விருது வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது.

முன்னதாக, கல்லூரிக்கு வந்த செல்லம்மா பாரதி ரதத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் கல்லூரியின் முதல்வர் லச்சுமணசாமி வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் வாசுகி தலைமையுரை ஆற்றினார். கோவை, அரசு கலைக் சுல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைப் பேராசிரியர் சுப்பிரமணியம், சேவாலயா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் முரளிதரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இவ்விழாவில் பாரதியாரின் கொள்ளுப் பேரன் ராஜ்குமார் பாரதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசுகையில்: “பாரதியின் சிந்தனைகள் மக்களின் மனங்களில் விடுதலை உணர்வை ஊட்டின என்றும் அவரது கவிதைகள் அன்பு, நம்பிக்கை, உறுதி ஆகியவற்றை ஏற்படுத்தின” என்றும் குறிப்பிட்டார்.

பாரதியாரின் எள்ளுப் பேரன் இரா. நிரஞ்சன் பாரதி முன்னிலை உரையாற்றினார். பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரின் இளம் நெஞ்சங்களில் தமிழுணர்வையும் நாட்டுப்பற்றையும் விதைக்கும் தமிழாசிரியர்கள் பதினெட்டு பேருக்கு மகாகவி பாரதி விருது வழங்கப்பட்டது.

இவ்விருதை பாரதியாரின் கொள்ளுப் பேரன் ராஜ்குமார் வழங்கினார். விழாவின் நிறைவில் கல்லூரியின் கல்விப்புல முதன்மையர் மதன் சங்கர் நன்றியுரை ஆற்றினார்.

விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கவிதை, பாட்டு ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குச் சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்பட்டன.