அவினாசிலிங்கம் மகளிர்கல்வி நிறுவனத்தில் நன்றி கூறும் விழா

அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்கள் சார்பாக அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் நன்றி நவிலும் விழா நடைபெற்றது.

அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர் 2021-2022 வரையிலான பல்கலைக்கழகத்தில் நடந்த பல்வேறு சாதனை நிகழ்வுகளை எடுத்துரைத்து பேசுகையில், நன்றி நவிலும் விழா என்பது அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் பாரம்பரியமான ஒன்று. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரானா சூழலால் இது நடைபெறவில்லை. பல்கலைக்கழகம் பல்வேறு வளர்ச்சி நிலைகளை அடைந்துள்ளது என்றார்.

இதனைத் தொடர்ந்து, அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் சென்ற ஆண்டின் மாணவியர் தலைவிகள் வருங்கால மாணவியர் தலைவிகளுக்குப் பொறுப்புகளை ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

ஸ்ரீ அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்களின் இணை நிர்வாக அறங்காவலர் கௌரி இராமகிருஷ்ணன் தமது தலைமையுரையில், பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பயிலும் மாணவிகளுக்கும், மாணவிகளின் தலைவியர்க்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

நமது கல்வியில் மாற்றங்கள் வரலாம். ஆனால், அதன் மதிப்புக்கள் என்றும் குறையாது. போட்டி நிறைந்த இன்றைய உலகில் மாணவிகள் வெற்றிக்கான முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் சமீரன் கலந்து கொண்டு பேசுகையில்: மகளிர் கல்வி என்பது போற்றுதலுக்குரியது. பெண்கல்வி யாவற்றையும் செய்யும், பெண்களால் மட்டுமே அனைத்தும் முடியும் என்பதனை எனது குடும்பத்திலுள்ள பெண்களின் மூலம் அறிந்து கொண்டேன். இன்று மாவட்ட ஆட்சியராக வளர்ச்சியடைந்துள்ள எனது வாழ்வில் என் குடும்ப பெண்களே எனக்கு முன்னோடிகளாக இருந்தனர்.

கல்வி என்பது ஒரு ஆயுதம். பெண்கள் அதனை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். இறுதியாண்டு பயின்று கல்வியில் சிறப்பிடம் பெற்று பரிசுபெற்ற மாணவிகளுக்கும், மாணவியர் தலைவியர்களுக்கும் எனது பாராட்டுகள் என்று கூறினார்.

பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பயின்று கல்வியில் சிறப்பிடம் பெற்று பரிசுபெற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் பரிசுகள் வழங்கினார்.