வெள்ளி கிரகத்தை ஆராயும் இஸ்ரோ: விண்கலம் அனுப்ப திட்டம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான (இஸ்ரோ), தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் மங்கள்யான் திட்டம், சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் சந்திரயான்-1, சந்திரயான்-2 திட்டங்களையும் மேற்கொண்டது.

அதைத் தொடர்ந்து, இப்பொழுது வெள்ளி கிரகத்தின் மீது ஆய்வு செய்ய இஸ்ரோ முடிவெடுத்துள்ளதோடு, வெள்ளி கிரகத்தை ஆராய்ச்சி செய்ய விண்கலம் அனுப்ப திட்டமிட்டுள்ளது.

சந்திரனுக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் விண்கலம் அனுப்பியதைத் தொடர்ந்து வெள்ளி கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் பணிகளில் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது.

இதுதொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பூமியும் வெள்ளி கிரகமும் அருகருகே வருவதால் குறைந்த அளவு உந்துசக்தியை கொண்டு விண்கலத்தை, சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தலாம் என்றும் இல்லையென்றால் 2031 வரை காத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்த விண்கலம், வெள்ளி கிரகத்தின் மேற்பரப்பின் அடியில் என்ன இருக்கிறது என்பது குறித்தும், அதனை சுற்றி உள்ள மேகக்கூட்டங்கள் பற்றி ஆராய உள்ளது.

 

Source: News 18 Tamilnadu