ஒரு கப் காஃபியும் கதையும்!

காலையில் கண் விழித்தவுடன், மதிய உணவுக்கு பின், வேலையின் சிறு இடைவேளை அல்லது இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன் என உலகின் பெரும்பாலானோருக்கு எப்போதும் பிடிக்கும் ஒரு பானமாக காபி உள்ளது. இந்த காபியின் மணமும், சுவையும் காபி பிரியர்களுக்கு அலாதியான மயக்கத்தை கொடுக்கும்.

பழுப்பு நிறத்திலிருக்கும் கொட்டையை பொடி செய்தே காபி போடும் பொடி தயாரிக்கப்படுகிறது என்பது நமக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும்.

எத்தியோப்பியாவில் தான் முதன்முதலாக காபி கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு ஆடு மேய்ப்பவர் காபி செடியைக் கண்டு பிடித்ததாக ஒரு வரலாறு உள்ளது. காபியை கண்டுபிடித்தது ஒரு ஆடு மேய்ப்பவர் என்ற உடன் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?

ஆம். அவரின் பெயர் கல்டி. அவர் தினமும் ஆடுகளை அழைத்துக் கொண்டு மேய்ச்சலுக்கு செல்லும்போது ஆடுகள் ஒரு வகையான பழத்தை உட்கொண்டன. அதை சாப்பிட்ட உடன் ஆடுகள் உற்சாகமாகி துள்ளிக் குதித்து ஓட ஆரம்பித்தன. ஆரம்பத்தில் கல்டிக்கு இது பெரிய ஆச்சரியமாக தெரியவில்லை. ஆனால் தினம் தோறும் அதே பகுதிக்கு வரும்போது ஆடுகள் அதை உண்டபின் உற்சாகம் கொண்டன.

ஆடுகள் அப்படி எதை உண்கிறது? உண்டபின் ஏன் உற்சாகம் கொள்கிறது என்ற சிந்தனை கல்டிக்கு வருகிறது. இதனை ஆராயும் போது சிவப்பு நிறத்தில் பெர்ரி பழத்தின் தோற்றத்தில் இருக்கும் பழத்தை சாப்பிட பின் ஆடுகள் உற்சாகம் கொள்கிறது என்பது அவருக்கு புலப்படுகிறது.

அந்த சிவப்பு நிற பழம் தான் காபி பழம் என்றும், அதில் இருந்துதான் காபி கொட்டை எடுக்கப்பட்டு காபி கண்டுபிடிக்கப்பட்டது எனக் கூறப்பட்டாலும், இது வெறும் கதை எனவும் கூறுகிறார்கள்.

ஆனால் உண்மையில், இந்த காபியை ஒரு திரவமாக்கி பருகலாம் என்பது ஏமன் நாட்டில் ஷேக் உமர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இவர், ஒருமுறை நாடுகடத்தப்பட்டார். ஒரு பாலைவனத்தில் விடப்பட்டு சாப்பிட எதுவும் கிடைக்காமல் ஒரு செடியின் காய்களைப் பறித்து சாப்பிட்டார்.

அந்த காய் கசப்பு சுவையை தந்ததால், அவற்றை நெருப்பில் வறுத்த பின் சாப்பிட்டார். அப்போதும் அது கசந்தது. பின் அதை தண்ணீரில் போட்டு பார்க்கும் போது, அதன் நிறம் மாறுகிறது. அதை குடித்த பின் இரு நாட்கள் அவருக்கு இருந்த பசி கூட அடங்கி விட்டது. அவர் உடல் புத்துணர்வும், உற்சாகமும் கொள்ள ஆரம்பித்தது. இப்படித்தான் காபி பானம் கண்டறியப்பட்டது. இந்த பானம் முதலில் மருந்தாகவே பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த பானம் இங்கு மட்டும் நிறுத்திவிடாமல் 200 வருடங்களுக்கு பிறகு துருக்கிய அடைந்த பின் அங்கிருந்து ஐரோப்பாவிற்கு சென்றது இந்த காப்பி பானம். பின் உலக நாடுகளுக்கும் இந்த பானம் அறிமுகமானது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் பாபா புடன் என்ற துறவியால் அறிமுகம் செய்யப்பட்டு, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் மலைப்பரதேசங்களில் காபி தோட்டங்கள் அமையத்தொடங்கின. காபி குடிப்பது அதிகரித்தது. உடனே காபியின் மதிப்பும் உயர்ந்தது.

காபி குடிப்பது நம்பிக்கையின், புத்துணர்வின் அடையாளமாக ஊடகங்களால் முன்னிறுத்தப்படுகிறது. இன்றைய காபி மோகத்தின் பின்னால் வணிக நிறுவனங்களின் விளம்பரங்கள் காரணிகளாக உள்ளன.
அமெரிக்கர்கள், ஆண்டிற்கு 250 கோடி ரூபாயை காபி குடிப்பதற்கு செலவு செய்கின்றனர், அமெரிக்கர்களுக்கு அடுத்தப்படியாக, பின்லாந்த், ஸ்வீடன், நார்வே, டென்மார்க் உள்ளிட்ட நாட்டினர் காபி விரும்பிகளாக உள்ளனர்.