தமிழகத்தில் இன்று தொடங்குகிறது கத்திரி வெயில்

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் ஆண்டுதோறும் மே மாதத்தில் தொடங்கும். பரணி மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சரிக்கக் கூடிய அந்த நாட்களுக்கு பெயர்தான் அக்னி நட்சத்திரம். இந்த ஆண்டுக்கான கத்திரி வெயில் இன்று (மே 4) தொடங்குகிறது. வரும் 28-ம் தேதி வரை 25 நாட்களுக்கு கத்தரி வெயில் நீடிக்க உள்ளது.

இந்த காலகட்டத்தில் வெயில் வழக்கத்தைவிட அதிகம் சுட்டெரிக்கும். தமிழகத்தில் ஏற்கெனவே பல மாவட்டங்களில் வெயில் அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டிய நிலையில், பகலில் வீசும் அனல்காற்றால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் வெயிலின் தீவிரம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கத்திரி வெயில் இன்று தொடங்கினாலும், வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.