கொங்குச்சீமை செங்காற்று 16 – எதிர்பாராத சங்கதி ஒன்று கிடைத்தது!

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை…

– சூர்யகாந்தன்

 

சிறுவயசிலிருந்து இந்தச் செம்மறிகளுடன் புழங்கி பழக்கப் பட்டிருந்ததால் பராமரிப்புச் செய்வது சுப்பையனுக்கு  சரளமாகக் கைவந்தது. கண்களைக் கட்டிவிட்டு இவனை ஆட்டுப்பட்டிக்குள் கூட்டிச் சென்றால் கூட அது களிடமிருத்து வீசும் ஒரு வித புழுக்கமான வாடையை வைத்தே ‘ இது என்ன ஆடு! இதோட குணம் இப்படிபட்டது, இதுக்கு இன்ன வயசு..’ எனச் சரியாகச் சொல்லிவிடக் கூடியவனாக இருந்தான்.

முன்பெல்லாம் உள்ளூரி லேயே இரண்டு மூன்று குடும்பத்தார் செம்மறியாட்டு ரோமங்களைக் கத்தரித்துத் தரச்சொல்லி அவற்றிற்கு விலை கொடுத்து வாங்கிக் கொண்டது உண்டு. எடை போட்டு கிலோ இவ்வளவு என்று சந்தையிலும் கொண்டு போய் விற்றுவிட முடிந்தது. ஆறு மாதத்திற்கொரு முறை இந்த ஆடுகளின் மூலம் இவ்வகையில்  உபரி வருமானமும் வந்து கொண்டிருந்தது. பணத்தேவையின் நிமித்தம் நடுத்தர வயதுள்ள ஆடுகளை வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதும் உண்டு. பெரும்பாலும் கறிக்காக வாங்கிச் செல்லும் கசாப்புக் கடைக்காரர்கள் தான் அவ்வப்போது வந்து  ‘ஆடுக வெலைக்கு குடுக்கிறது உண்டா..’ என விசாரித்துப் போவார்கள்.

‘நல்ல உட்டுவளி’யாய் இனப்பெருக்கமுள்ள ஆடுகளாய்ப் பார்த்து வளர்ப்பதற்காக  வெளியூர்க்காரர்களும் வந்து வாங்குவதும் உண்டு. ஆடுகள் வைத்திருப்பவர்களே கம்பெனி நெசவு  வேலையையும், தங்கள் வீட்டிலுள்ளவர்களைக் கொண்டு செய்து வருமானம் ஈட்டியதெல்லாம் இப்போதில்லை. பட்டி பெருகி வளமாக இருந்த வருடங்களில் இங்கே பக்கத்து ஊரான ராமசெட்டிபாளையம் இடும்பன் கோயில் பண்டிகைக்கு கிடாய்களை காணிக்கையாகக் கொடுக்கும் வழக்கமும் இருத்தது.சில தடவை பெட்டை ஆடுகள் இரண்டு மூன்றைக் கொடுக்க நேர்ந்தது. அவற்றை அந்தக் கோயில் நிர்வாகிகள் ஏலம் விட்டு அதில் கிடைத்த பணத்தை ‘சாமி காணிக்கை’யாக ஆக்கிக்கொண்டதும் உண்டு.

வாய்ச்சப்பை ,கோமாறி போன்ற நோய்கள் வந்து பட்டியை அழிவு செய்யாமல் இருக்க வேண்டுமென்று உள்ளூர் மாரியம்மனுக்கு,காட்டு மாரியம்மனுக்கு மட்டுமின்றி தன்னாசியப்பனுக்கும் வெள்ளக்கு ட்டராயனுக்கும் மூணு வருசத்துக் கொருதரமாவது பொங்கல் வைத்துப் பூஜைகள் செய்வதை அய்யன் காலத்திலிருந்து வழக்கமாகக் கொண்டிருப்பதை சுப்பையன் எண்ணிக் கொண்டிருந்தான்.

காடுகளில் சொக்குப் பயிரையோ விஷப் பூண்டையோ தின்று ஆடுகள் வயிறு உப்பி, கிழே துவண்டு விழுந்து இறக்காமல் பார்த்துக் கொள்கிற ஜாக்கிரதை உணர்வு,கையில் வைத்துள்ள சல்லைக் குச்சியைப் போல் மேய்ச்சல்காரர்களுக்கு சதா இருந்தாக வேண்டும்.

வேடப்பட்டி வாய்க்காலைத் தாண்டி  வடபுறமிருந்த தோட்டத்தில் சோளப்பயிர்கள் திமுதிமுவென நின்றிருந்தன. வேலியோரத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை அந்தப் பக்கம் எங்கேயாவது புகுந்துவிடாமல் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு நின்றிருந்தபோது சுப்பையனுக்கு இந்தச் செம்மறிகளைப் பற்றிய கவனங்கள் மேய்ப்பு மேய்ப்பாக மனதுக்குள் வட்டமிட்டன.

“வருசத்துல பாதி இப்படி இதுகலெ மேய்க்கிறதுல பலன் கெடைக்குது.பட்டிபோடுற வாய்ப்புக அகப்படுது. அப்புறம் பாதி,வெறுமனே மேய்ச்சிட்டுத் திரியறதாகப் போயிடுது. வரும்படி எதுவும் கெடையாது.செலவுகளுக்குப் பணம் வேணும்னு ஏவாரிகளுக்கு விக்க வேண்டியதாகப் போயிடுது…”

“காடுகள்லெ வெள்ளாமெ இல்லாததால அய்யனுக்கும் எந்த வருமானமும்  கெடையாது.பண்டம் பாடிகளை வெச்சு முட்டுவளி போட முடியாதுங்கிறதால அதுகளெயும் வித்தாச்சு.ஏதோ அந்த மாட்டையும் கன்னையும் அம்மா பாத்துக்குது.பால் தேவைக் கொசரம் அதுகளைப் பாங்கு பண்ண வேண்டியதிருக்கு. பத்தாததுக்கு மேவுக் கஷ்டமும் வேறெ….!”

தம்பிகாரன் படிப்பு முடிஞ்ச கையோட வேலை கெடச்சு உக்காந்தான்னா அவஞ்சம்பளத்தைக் கொண்டு அய்யனும் அம்மாளும் சௌக்கியமா

இருக்கலாம். அண்ணங் காரனால தான் உபகாரம் ஒண்ணையுங்காணோம். நம்மளுக்கும் குடும்பம்னு ஆகிப்போச்சு. இத்தனெ நாளும் ஒண்ணும் இல்லையினாலும் இனிமேற் கொண்டு சச்சரவுக எதுனாச்சும் கௌம்பாமல் இருந்தாத் தேவலெ!அவிக பொம்பிளைகளுக்குள்ளே சடுத்தங்க வராமெ இருக்கோணும்.நாமதா பெத்துப் பொறப்புனு ஒண்ணாமண்ணா எத்தனையோ இதுகளைத் தாங்கிக் குடுத்துப் பொழப்புத்தனம் பண்ணீட்டிருக்கறோம்”.

குடும்பநிலை மையும்,அதற்குள் ஒன்றாகக் கலந்து நிற்கும் தனது வாழ்க்கை யையும் இவன் சிந்தித்துப் பார்ப்பதற்கு இந்தத் தனிமையான சூழ்நிலை காரணமாய் ஆகியிருந்தது.

“….ம்மே! மே……அம்மே ….ம்மே”.

குட்டிகளைப் பிரிந்து வந்திருந்த ஆடுகள் ,பால் கொடுக்கும் நேரமாகிவிட்டதால் புல்வெளியிலிருந்து  தலைகளைத் தூக்கிப் பார்த்துச் சத்தமிட்டன.

“ச்செரி….உனி அதுகலெ…. வடக்கெ திருப்பி ஓட்டியாங்கடா! பொழுது சாஞ்சுடுச்சு”.

பையன்களை நோக்கி இவன் குரல் கொடுத்தான்.

மேச்சேரி இனங்களும், மயிலம்பாடி ரகங்களும் இருபத்தஞ்சு உருப்படிகள் இருந்தன. மத்ததெல்லாம் இங்கத்த வகையறாக்கள்தான். வியாபாரிகள் தொண்டாமுத்தூர் ஏரியாக்காரர்கள் என்றால் முன்னத்த ரெண்டு ரகங்களாகத்தான் பார்த்து வாங்கி கறிபோடுவார்கள். கொழுப்பு அதுகள்லெ கூடுதலாக இருக்குமென்பது அவர்களின் அபிப்ராயம்.

“ஆடுகளை அறுத் ததற்குப் பொறகு வெள்ளாட்டுக்கறி செம்மறியாட்டுக் கறின்னு அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. யேவாரத் தந்திரம் தெரிஞ்சவிகளாச்சே கசாப்பு போடுறவனுக ரெண்டையும் கலந்து எல்லாம் வெள்ளாட்டுக் கறிங்க. அதுக குட்டிகறிங்க. தோட்டத்துக்கர வழிலெ நல்லா மேய்ப்புல இருந்த ஆடுங்க இது.”

என வக்கணையாகப் பேசி, விற்காததைக்கூட பேச்சுச் சாதுர்யத்தினாலேயே விலை பண்ணி விடக்கூடியவர்களாய் இருந்தனர்.

“மலையிலெ மேஞ்சா என்ன? தோட்டத்து நெலத்துல மேஞ்சா என்ன? மேட்டாங்காட்டுல மேஞ்சா என்ன? எல்லாமே கடைசிக்கு மனுசனோட வவுத்துக்கு ஆகாரமா ஆகுறதுகதா.”

வீரண்ணகவுடர் சொன்னது இவனுடைய நினைவுக்கு வந்தது. ஆடுகளைப் பட்டிக்குள் ஓட்டி எண்ணிக்கையைச் சரி பார்த்தனர் பையன்கள்! காற்று பிசுபிசுவென குளிரூட்டும் விதமாக வீசியது.

சிறுவயதிலிருந்தே காடு மேடாய்த்திரிந்து பனியையும் வெய்யிலையும் குறைவில்லாமல் சுமந்து பழக்கப்பட்டிருந்தால்  சுற்று சூழல்களை இயல்பாக எடுத்துக் கொள்ளும் இதயம் சுப்பையனுக்கு வாய்த்திருந்தது. அது மட்டுமின்றி தனது ஆடுகளையே நெருங்கிய சொந்தங்களாய்க் கருதியபடி அவைகளை நேசிக்கக்கூடிய உணர்வுகள் கொண்டவனாகவும் ஆக்கியிருந்தது.

வீட்டுக்குப் போய்வந்து இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டதால் நாளைக்கு ஆடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டுபோய் விட்டுவிட்டு அப்படியே அங்கிருந்து போய் ஒரு நடை பார்த்துவிட்டு வந்துவிடலாம் என இவன் எண்ணிக்கொண்டாள். ஆடுகளைப் பையன்கள் பத்திரமாய்ப் பார்த்துக் கொள்வார்கள் ஒன்றும் சிரமம் இருக்காது. மத்தியானச் சாப்பாட்டு வேலை க்குள் திரும்பி விடலாம் என எண்ணினான்.

வயல் காரரைப் பார்த்து ‘செலவிருப்பதைச் சொல்லி பணம் வாங்கிக் கொண்டு புறப்பட்டான். ‘ரெண்டு வாரத்துப்படி ஆகுது. மூணாயிரம் கணக்கு வருது ஆனா அவிக கடைசிக்கு ஒண்ணா வாங்கிக்கலாம். இல்லெ அப்படின்னு இந்த ரெண்டைக் குடுக்கிறதுக்கே யோசனெ மேலெ யோசனெ பண்றாங்க! கையிலயும் காசு மொடையினாலெ ஆள்காரப் பசங்களுக்குச் செலவுக்குக் குடுக்கறதுக்குக்கூட தட்டுப்பாடா போச்சு’…எண்ணியவாறு நடந்தான்.

பணத்தை இந்தத் தடவை அய்யனிடத்திலேயே முழுவதையும் கொடுத்து விடுவதா..? இல்லை பாதியாகப் பிரித்து ஒரு பகுதியைக் கண்ணத்தாளிடம் தந்து விடலாமா? அதையெல்லாம் விட ஒரே மனதாக அம்மாவிடமே கொடுத்துவிடலாம்.

வீடுபோய்ச் சேர்ந்தவனுக்குச் சற்று நேரத்திலேயே எதிர்பாராத சங்கதியொன்று காதுகளுக்குள் இறங்கியது.

மனைவி தான் இவனைத் தனியாகக் கூட்டிச் சென்று அந்தத் தகவலை மெதுவாகக் கூறினாள். இவனுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. தொண்டை வறண்டது.

(தொடரும்)