சாலை கூறும் சரித்திரம் – ஜி.கே.சுந்தரம் வீதி

கோயம்புத்தூரின் மிகப்பெரிய தொழில் குழுமங்களில் ஒன்றான லட¢சுமி மில் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஜி.கே.சுந்தரம். அவருடைய தந்தை ஜி.குப்புசாமி நாயுடு, நூற்றாண்டு கண்ட லட்சுமி மில்லைத் தொடங்கியவர். ஜி.கே.சுந்தரத்தின் மூத்தசகோதரர்லட்சுமி மிஷன் ஒர்க்ஸ் நிறுவனத்தைத் தொடங்கிய ஜி.கே.தேவராஜிலு ஆவார்.

ஜி.கே.சுந்தரம், தனது  தந்தையின்  தொழில் துறையான ஜவுளித்துறையில் படிப்பதற்காக இங்கிலாந்து சென்று போல்டன் நகர் சென்று படித்து நாடு திரும்பியவர். தனது தந்தை சகோதரர்களுடன் இணைந்து லட்சுமி மில் நிர்வாகத்தைக் கவனித்து வந்தார். தந்தையின் மறைவுக்குப் பிறகு, லட்சுமி மில் நிர்வாகத்தை முழுமையாக கவனித்து வந்தார்.

நாடறிந்த தொழிலதிபராக இருந்த நிலையிலும், பொது சேவை என்பது அவரது இரத்தத்தில் ஊறியதாக இருந்தது. தனது பதினாறாம் வயதிலேயே இராஜாஜி தலைமையில் தமிழகத்தில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்டார். எப்போதும் நாட்டு நடப்புகளில் ஆர்வம்  காட்டுபவராகவும், நாட்டின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை காட்டுபவராகவும் இருந்து வந்தார். கோவை நகரத்தின் பல தொழில் மற்றும் வணிக அமைப்புகளில் தலைவராக இருந்து சேவை புரிந்து வந்துள்ளார். கோவை இந்திய தொழில் வர்த்தக சபை (கோவை) பாரதீய வித்யாபவன் உள்ளிட்ட பல அமைப்புகளில் உறுப்பினராக இருந்தவர்.

அவருடைய பெயரை சாயிபாபா காலனியில் உள்ள இந்த சின்னஞ்சிறு வீதிக்கு எதற்காக வைத்தார்கள்?

ஒருகாலத்தில் கோவை டவுன்ஹாலைச் சுற்றி இருந்த கோவை நகரம் 1920, 30களில் ஆர்.எஸ்.புரமாக விரிவுபெற்றது. அதன்பிறகு 1970களில் இன்னும் வடக்கில் சாயிபாபா காலனி, கே.கே.புதூர்  எனும்  குப்பகோனாம்புதூர் ஆகிய இடங்களில் குடியிருப்புகள் உருவாகின. அந்த வளர்ச்சிப் பணியில் ஜி.கே.சுந்தரத்துக்கு முக்கியப்பங்குண்டு.

அவர் கோயம்புத்தூர் கோ ஆபரேட்டிவ் ஹவுஸ் கன்ஸ்ட்ரக்வுன் சொசைட்டியின் தலைவராக பொறுப்பு வகித்து, இப்பகுதியில் குடியிருப்புகள் பெருகுவதற்கு பெரும் பங்காற்றினார். அதை நினைவு கூறும் வகையில் கே.கே.புதூரில் ஒரு தெருவின் பெயர் ஜி.கே.சுந்தரம் வீதி என்று அழைக்கப்படுகிறது.