ஆஸ்கர் விருது பிரிவில் இருந்து வெளியேறிய கூழாங்கல்

சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது பிரிவில் இந்தியா சார்பில்  அனுப்பப்பட்ட கூழாங்கல் திரைப்படம் போட்டியிலிருந்து வெளியேறியது.

வரும் 2022-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து சமீபத்தில் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுப் போட்டிக்கும் ‘கூழாங்கல்’ படம் பரிந்துரைக்கப்பட்டது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்

அறிமுக இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் எழுதி, இயக்கிய படம் கூழாங்கல். சுமார் பதினைந்து லட்சத்தில் தயாரான இந்த படத்திற்கு, போட்ட பணம் கிடைக்குமா என தயாரிப்பாளர் படத்தை விளம்பரம் செய்ய தயங்கியுள்ளார். சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் ஏற்கவில்லை.

இயக்குனர் ராம் படத்தைப் பார்த்து, விக்னேஷ் சிவனுக்கு பரிந்துரைக்கிறார். படம் பிடித்துப்போக, விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் படத்தை வாங்கி சர்வதேச திரைப்பட விழாவுக்கு படத்தை அனுப்பியது. கூழாங்கல் படத்தின் கதையை கேட்டு விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரித்தது என பலர் எண்ணக் கூடும் ஆனால் அது உண்மை அல்ல. படம் நன்றாக இருப்பதைப் பார்த்து அதை வாங்கியவர்கள் தான் இவர்கள்.

சர்வதேச அளவில் பல விருதுகளைப் பெற்ற இப்படம், இந்த வருடம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதை படம் வெல்லும் என்று பலர் நம்பிய நிலையில், ‘கூழாங்கல்’ திரைப்படம் இறுதிப் பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளது.