மலை கிராமத்தை தூய்மை செய்த ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள்

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், கோவையை அடுத்த ஆனைக்கட்டி அருகேயுள்ள பனப்பள்ளி கிராமத்தில் 5 நாட்கள் தூய்மை இந்தியா சிறப்பு முகாம் நடைபெற்றது.

முதல் நாளான 25ம் தேதி மாங்கரை சோதனைச் சாவடி சந்திப்பில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து, அப்பகுதியை பிளாஸ்டிக் இல்லாத பகுதியாகப் மாற்றினார்கள். 26ம் தேதி பனப்பள்ளி கிராமத்தில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் பொதுவிடங்களில்  காணப்பட்ட குப்பைகள், பிளாஸ்டிக் என 2 டன் கழிவுகளைச் சேகரித்தனர். அதைத்தொடர்ந்து அங்கிருந்த சமுதாயக் கூடத்தை சுத்தம் செய்தனர். அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் வளாகத்தைச் சுத்தம் செய்த நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் வளாகத்தில் காணப்பட்ட புற்கள், புதர்களை அகற்றி சுத்தம் செய்தனர்.

27-ம் தேதி பனப்பள்ளி நூலகத்திற்கு வெள்ளையடித்து வர்ணம் பூசப்பட்டது. பின்னர் பள்ளியின் சுற்றுச்சுவர் மற்றும் வளாகத்தை வெள்ளையடித்து சுத்தம் செய்தனர். சுவர்களில் மாணவர்களைக் கவரும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதினர். ஊர்க்கோயிலை சுத்தம் செய்தனர். 28-ம் தேதி வீடு வீடாகச் சென்று, பொதுமக்களுக்கு சுத்தம் சுகாதாரத்தின் அவசியம், கொரோனா நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இறுதி நாளான இன்று தூய்மை இந்தியா முகாம் நிறைவு விழா, ஊர்க்கோவில் வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசும்போது, ‘தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், இந்த சிறப்பு முகாமை நடத்த பாரதியார் பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியது. அதன்படி நாமும், 5 நாள் முகாமை சிறப்பாக நடத்தி முடித்துள்ளோம். இம்முகாமை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி தான் முதலில் நடத்தியது பெருமையளிக்கிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மூலமாக பல்வேறு சேவைகளைச் செய்து வருகிறது. இப்பணியை இக்கல்லூரி தொடர்ந்து செய்யும்’ என்றார்.

பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.அண்ணாதுரை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசும்போது, “100 இளைஞர்களைக் கொடுங்கள் இந்த நாட்டை மாற்றிக் காட்டுகிறேன் என்றார், விவேகானந்தர். அவருடைய வாக்கின்படி, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் 30 மாணவர்கள் இந்த கிராமத்தை மாற்றிக் காட்டியுள்ளனர். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். இந்த முகாமின் மூலம் நீங்கள் கற்றுக் கொண்டதை நான் கண்டு அறிந்து கொள்ள முடிகிறது. இதை நாட்டு நலப்பணித்திட்டம் என்ற ஓர் குடும்பத்தின் பணி என்று கூறினால் மிகையாகாது. நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் இதுபோன்ற முகாம்கள் மூலம் பொதுமக்களைச் சந்திக்கும் போது அவர்களின் அறியாமையைப் போக்க வேண்டும். தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

அதைத்தொடர்ந்து பனப்பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி சார்பில் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. பனப்பள்ளி ஊர் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்பட்டன. முன்னதாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் எஸ்.பிரகதீஸ்வரன் வரவேற்றார். முடிவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஆர்.நாகராஜன் நன்றி கூறினார்.