கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் அதிநவீன கிரையோ அபலேசன் கருவி அறிமுகம்

தமிழகத்தில் முதன் முறையாக கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில், சீரற்ற வேகமான இருதயதுடிப்பைக் கட்டுபடுத்தும், அதிநவீன கிரையோ அபலேசன் கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிறக்கும் போதே இருதயத்தில் ஏற்படும் குறைபாடுகள். மாரடைப்பு ஏற்பட்டு இருதயம் பாதிக்கப்படுவது மேலும் இருதயத்தில் உள்ள வால்வுகளில் உள்ள பிரச்சினைகள் உள்ளிட்ட காரணங்களால் சீரற்ற இருதயத் துடிப்பு ஏற்படுகிறது. சீரற்ற இருதயத் துடிப்பை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை செய்வது குறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.

இந்நிலையில், கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில், சீரற்ற வேகமான இருதயத் துடிப்பை கட்டுபடுத்தும், வகையிலான கிரையோ அபலேசன் எனும் நவீன வகையிலான கருவி, மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக நிறுவப்பட்ட இந்த கருவியின் பயன்பாடு குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

இதுகுறித்து மருத்துவமனையின் இருதய மருத்துவர் தாமஸ் அலக்ஸாண்டர் கூறியதாவது: ” உலகில் 60 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இந்த சீரற்ற இருதயத் துடிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெறாவிட்டால், இருதய செயலிழப்பு, பக்கவாதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. சீரற்ற இருதயத் துடிப்பால் பக்கவாதம் ஏற்பட 5 மடங்காக வாய்ப்பு அதிகரிக்கிறது. சில நேரங்களில் சீரற்ற இருதயத் துடிப்பு எவ்வித அறிகுறி இல்லாமல் தீவிர மருத்துவ சிகிச்சைக்கான தேவையை உண்டாக்கும் என்றார்.

மருத்துவமனையின் இருதயத் துடிப்பு (ELECTROPHYSIOLOGY) பிரிவு சிறப்பு மருத்துவர் லாரன்ஸ் ஜேசுராஜ் கூறியதாவது: “அதி வேகமாக இருதயத்தின் துடிப்பு இருக்கும்போது, நுண் குழாய் செலுத்தி, இருதயத்துக்கு செல்லும் மின் சமிக்ஞைகளை கட்டுப்படுத்தி சரி செய்யும் தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது புதுமையான முறையாக குளிவிர்க்கும் முறை (CRYOABLATION) அறிமுகமாகியுள்ளது. திரவ நிலைக்கு உறைய வைக்கப்பட்ட நைட்ரஜன் டை ஆக்சைடு, நுண்குழாயில் செலுத்தப்படுகிறது. இருதயத்தின் மேல் அறையில் உள்ள செல்களில் வெப்பத்தை இது குறைத்து, இருதயத்தின் துடிப்பைக் கட்டுப்படுத்துகிறது. இப்புதுமையான முறை 80 நாடுகளில் 1 மில்லியன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது,” என்றார்.

தொடர்ந்து மருத்துவமனையின் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி கூறியதாவது: “இத்தகைய உறை நிலை சிகிச்சை முறை (Cryoablation), தமிழ்நாட்டில் முதல் முறையாக கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில் சில மருத்துவமனைகள் மட்டுமே இந்த வசதியைக் கொண்டதாக உள்ளது. மிகவும் சிக்கலான சீரற்ற இருதயத் துடிப்பைக் கொண்ட நோயாளிகளுக்கு இது ஒரு அதிநவீன மற்றும் பாதுகாப்பான சிகிச்சை முறையாகும். தமிழ்நாட்டில் இந்த சிகிச்சை முறையை அறிமுகப்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சி அடைவதோடு, இந்த முறையை பயன்படுத்தி இருதய சீரற்ற நோயிற்கான சிகிச்சை பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் அளிக்கப்படும்,” என்றார்.