கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

உயிரிழந்த டாஸ்மாக் ஊழியரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கவில்லை என்று கூறி கோவையில் மண்டல அலுவலகம் முன்பு டாஸ்மாக் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் டாஸ்மாக் கடையில் பணியில் இருந்த டாஸ்மாக் ஊழியர்களை மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடியது. இதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் நடந்து பத்து நாட்கள் கடந்த பின்னும் இன்னும் அவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவில்லை என்றும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மற்றொரு ஊழியருக்கு மருத்துவ வசதி செய்து தரப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனை கண்டித்து கோவை டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.