டாக்டர். ஆர்.வி கல்லூரியில் சர்வதேச உணவு தினம்

காரமடையில் அமைந்துள்ள டாக்டர்.ஆர்.வி கலை அறிவியல் கல்லூரி மற்றும் காரமடை ஏகம் பவுண்டேசன் சார்பில் உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் சர்வதேச உணவு தினம் திங்கட்கிழமை கடைபிடிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் ராமகிருஷ்ணன் தலைமை ஏற்றார். கல்லூரி முதல்வர் ரூபா அவர்கள் முன்னிலை வகித்தார். பசி பட்டினி ஒழிந்து மக்களுக்கு உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் நூறு உணவு பொட்டலங்கள் மற்றும் பல்வேறு வகையான பாக்கெட் வகை உணவுகளை கொண்டு வந்தனர்.

பின்பு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்கு உள்ள நோயாளிகள் மற்றும் அவர்கள் உடன் இருக்கக்கூடிய உறவினர்களுக்கு அந்த உணவுகளை பகிர்ந்து வழங்கினர். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் உமா பிரியா செய்திருந்தார். இந்நிகழ்வு உணவின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு உதவும் வகையில் அமைந்திருந்தது..