கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் கல்வி தொழில்நுட்ப பிரிவிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்லூரி வளாகத்தில் கையெழுத்தானது.

கல்லூரியின் தலைவர் கே.பி. ராமசாமி முன்னிலையில் முதல்வர் அகிலா மற்றும் எல் அண்ட் டி நிறுவனத்தின் கல்வி இணைப்பு வணிக பிரிவின் தலைவர்   ஃபெபின் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் எல் அண்ட் டி நிறுவன கட்டுமான கார்ப்பரேட் மையத்தின் தலைவர்  கணேசன், எல் அண்ட் டி கல்வி தொழில்நுட்ப வளாக இணைப்பு வர்த்தக பிரிவு தலைவர் கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கணேசன் பேசும்போது, தொழில்துறையில் திறமையான பொறியாளர்களின் தேவை அதிகரித்து வருகிறது,  ஆனால் அதற்கு ஏற்ற பொறியாளர்கள் கிடைப்பதில்லை, எனவே; தொழிற்சாலைகளின் எதிர்பார்ப்பிற்கும் மாணவர்களின் திறமைக்கும் உள்ள இடைவெளியை குறைக்கும் வகையில்  இந்த ஒப்பந்தத்தின் மூலம் எல் அண்ட் டி நிறுவனம் இங்குள்ள மாணவர்களுக்கு  சான்றிதழ் பாடத்திட்டங்களை நடத்துவதோடு, எல் அண்ட் டி குழுமத்தின் அனைத்து நிறுவனங்களிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழி வகுக்கும் என்றார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம்  எல் அண்ட் டி கட்டுமானப் பிரிவில்  மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் தொழில்சார்ந்த பயிற்சி அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதோடு கல்லூரி வளாகத்தில் உயர் சிறப்பு மையம் அமைய இருக்கிறது.

இது குறித்து தனது செய்திக்குறிப்பில் கல்லூரி முதல்வர் அகிலா கூறியதாவது, நாட்டிலேயே எல் அண்ட் டி தொழில்  நுட்பக்கல்வி பிரிவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் பெற்ற முதல் கல்லூரி என்ற சிறப்பு குறித்து தான் பெருமை கொள்வதாகவும், எல் அண்ட் டி கல்லூரி இணைப்பு மையம் பொறியியல் பாடத்திட்டத்தோடு ஒவ்வொரு மாணவரும் மூன்று கிரெடிட்டுகள்  பெறும் வகையில் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட இருப்பதாகவும் கூறினார்.