தீபாவளி: சொந்த ஊர் செல்ல ஒரே நாளில் 28,000 பேர் முன்பதிவு

தீபாவளி பண்டிகைக்கு சென்னையிலிருந்து வெளியூர் செல்ல 28 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த மாதம் 4ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி வியாழக்கிழமை வருவதால் அதற்கு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை விடுமுறையாகவே இருக்கும். பிறகு சனி, ஞாயிறு என மொத்தம் 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஏற்கனவே ரயில்களில் ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளனர். சிறப்பு ரயில்களும் இயக்கப்படும்.

இந்நிலையில், அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய 30 நாட்களுக்கு முன்பு டிக் கெட் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தீபாவளி பண்டிகைக்கான முன் பதிவு நேற்று தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய ஒரே நாளில் சென்னையிலிருந்து வெளியூர் செல்ல 28,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

தீபாவளி சிறப்பு பேருந்துகள் தொடர்பான அறிவிப்பு வெளியானதும், முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.