கோவையில் நாளொன்றுக்கு 200க்கும் மேல் கொரோனா பாதிப்பு – மாநகராட்சி ஆணையர்

கோவையில் கொரோனா பாதிப்புகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த தகவல்களை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று (08.04.2021) கூறினார்.

அதில் அவர் கூறியதாவது:

கடந்த முறையை விட இம்முறை கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் எனவும், பாதிப்புள்ளவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்வதை தவிர்த்து மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும் என   தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் மாஸ்க் கண்டிப்பாக அணிய வேண்டும் என்றும், அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், அதேபோல் நிறுவனங்களும் வாடிக்கையாளர்கள் மாஸ்க் அணிவதை உறுதி செய்ய வேண்டும். தனிமனித இடைவெளி, சானிடைசர், பல்ஸ் ஆக்ஸொமீட்டர் ஆகிய வழிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றார். கடைபிடிக்காத நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படுவதுடன், ஒரு வாரம் வரை மூடுவதற்கான விதி உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

வீட்டு நிகழ்வுகளில் அதிகளவு கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், மக்கள் தாங்களாகவே சுயக்கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். முடிந்தவரை வெளியூர் செல்வதை தவிர்க்க வேண்டும் அல்லது வேறு வழியின்றி சென்றுவிட்டு திரும்புபவர்கள் 4 முதல் 5 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கோவை மாநகராட்சியில் நாளொன்றுக்கு 180 முதல் 220 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். 11 ஆம் தேதி முதல் கோவை மாநகராட்சி 5 மண்டலங்களிலும் நடமாடும் வாகனங்கள் மூலம் முகாம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார். கடந்தாண்டு மாநகராட்சியில் 4000 முதல் 4500 உச்சபட்சமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது 2500 வரை மேற்கொள்ளப்படுவதாகவும், தற்போது 31 பரிசோதனை மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

காருண்யா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் விடுதி, கொடிசியா ஆகிய வளாகங்கள் கொரோனா சிகிச்சை மையத்திற்கு தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மாநகராட்சி 32 ஆரம்ப சுகாதார மையங்களில் இதுவரை 50 ஆயிரத்து 227 தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.