இரண்டாம் அலை பரவலைத் தடுக்க தொழிற்சங்கங்கள் செய்ய வேண்டியது என்ன?

தமிழகத்தில் நாளுக்கு நாள் கோவிட் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா, இரண்டாம் அலை பரவலைத் தடுக்க, தமிழக அரசின் தொழில்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம் அவர்களுடன் நடந்த காணொலி கூட்டத்தில் கொடிசியா தொழிற் சங்கம் சமீபத்தில் கலந்துகொண்டது.

இதில் தொழிற்சங்கங்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பொது மக்களுக்கான அறிவுரைகளும் கலந்தாலோசிக்கப்பட்டன. இது குறித்த பத்திரிக்கை செய்தியை கொடிசியா தலைவர் ரமேஷ் பாபு வெளியிட்டார்.

இந்நிகழ்வில், தொழிற்சாலைகள் தங்களது ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டது குறித்த விவரங்களை சுகாதாரத்துறை கேட்கும்போது அளிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு தொழிற்சாலையிலும் இதற்கென்று ஒரு அலுவலரை நியமித்து பணியாளர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை மற்றும் ஆக்சிஜன் அளவு பரிசோதனைகள் ஆகியவற்றை குறிப்பிட்ட இடைவெளியில் செய்து அதற்கான பதிவேடுகளை பராமரிக்க வேண்டியது அவசியம் என்றும் எடுத்து சொல்லப்பட்டது.

மருத்துவ வசதி மையம் கொண்டுள்ள நடுத்தர மற்றும் பெரிய தொழிற்சாலை வளாகத்துக்குள் அந்த இடத்தை தடுப்பூசி போடும் மையமாக பயன்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

நூறு தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் தொழிற்சாலைகள் தடுப்பூசி போட விரும்பினால் கொடிசியாவை அணுகலாம் எனவும் கொடிசியா கோவை சுகாதாரத்துறை உதவி இயக்குநர் மூலமாக அதற்கான ஏற்பாடுகளை செய்து தரப்படும் எனவும் இதில் கூறப்பட்டது.

தற்போது பொதுமுடக்கம் கொண்டுவர முடிவு செய்யப்படவில்லை, என்றாலும் கடுமையான விதிமுறைகளோடு கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கோவிட் நோய்த்தொற்று பரவலைத் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் இணையான பொறுப்பு, அரசாங்கத்தோடு சேர்ந்து பொதுமக்களுக்கும் உள்ளது என இக்காணொளியில் அறியுறுத்தப்பட்டது.