மார்ச் முதல் பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் இயக்கம் ஆரம்பம்

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட பிற பாதிப்புகள் கொண்ட 40+ வயதினருக்கு மார்ச் முதல் கொரோனா தடுப்பூசி வழங்க உள்ளனர். இதற்காக மக்களே மருத்துவமனைகள், பொது சேவை மையங்கள், கோவின் (Co-Win) செயலி போன்றவற்றில் பதிவு செய்து கொள்ளலாம்.

மார்ச் முதல் பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் இயக்கம் ஆரம்பமாக உள்ளது. இரண்டாம் கட்ட தடுப்பூசி பணிகளில் தனியார் மருத்துவமனைகளுக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் தடுப்பூசிக்கான விலையை மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை.

முதல் கட்ட தடுப்பூசி திட்டத்தில், சுகாதாரப் பணியாளர்கள் போன்றவர்களின் தரவுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து பெற்றது. அதே போல் இம்முறை வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் மூத்த குடிமக்களின் தரவுகளும் அரசாங்கத்திடம் உள்ளன. இருப்பினும் மக்களே சுயமாக பதிவு செய்யும் வசதியையும் அரசு ஏற்படுத்த உள்ளது. இதற்கென கோவின் (Co-WIN) செயலியில் மாற்றம் செய்து வெளியிட உள்ளனர். அதில் பெயர், முகவரியுடன், ஆதார் எண் பயன்படுத்தி பதிவு செய்யலாம்.

ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரக பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு போன்ற பிரச்னைகள் உள்ள 40+ வயதினரும் பதிவு செய்யலாம். அவர்களுக்கு என தனியே ஒரு விண்ணப்பம் இருக்கும். அதில் அங்கீகாரம் பெற்ற மருத்துவரிடம் தங்களுக்கு இந்த பிரச்னைகள் உள்ளன என கையொப்பம் பெற்றிருக்க வேண்டும். அப்போது தான் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். அனைவராலும் மொபைல் செயலியை பயன்படுத்த முடியாது என்பதால் மருத்துவமனைகள், பொது சேவை மையங்கள் போன்றவற்றிலும் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்படும். இது பற்றி விரிவான தகவல்கள் விரைவில் சுகாதாரத் துறையால் வெளியிடப்படும்.