1000 கர்பினிகளுக்கு வளைகாப்பு நடத்திய ஆறுக்குட்டி எம்.எல்.ஏ.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி சார்பில் 1000 கர்ப்பிணி பெண்களுக்கு சீர் வரிசைகளுடன் வளைகாப்பினை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நடத்திவைத்தார்.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாள் விழாவையொட்டி கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி சார்பில் கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட ஆயிரம் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கோவை புறநகர் வடக்கு மாவட்ட அவைத் தலைவரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான வி.சி.ஆறுக்குட்டி தலைமை தாங்கினார். கோவை புறநகர் வடக்கு மாவட்ட  செயலாளரும், கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.ஜி  அருண்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வளைகாப்பு நிகழ்ச்சியினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஆயிரம் கர்ப்பிணி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், சேலை, வளையல் பழங்கள், சீர் பணம் அடங்கிய சீமந்த சீர்வரிசை பொருட்களை வழங்கி வளைகாப்பு நடத்தி  வைத்தார். அதனைத் தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு அறுசுவை விருந்து  வழங்கப்பட்டது.