நலத்திட்ட உதவிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குநர் மதிவாணன், தலைமையில் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் குறித்து கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அரசு துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி முன்னிலையில் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குநர், மதிவாணன், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்துராமலிங்கம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குநர் தெரிவித்ததாவது, பிற்படுத்தப்பட்டோர்/மிகப்பிற்படுத்தப்பட்டோர்/ சீர்மரபினர்/ சிறுபான்மையின வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் கல்வி/ வேலை வாய்ப்பு மற்றும் தொழில் போன்ற நிலைகளில் தங்களது நிலையினை உயர்த்திக்கொள்வதற்கான வாய்ப்புகள் அளிக்கும் பொருட்டும், சமுதாயத்திலுள்ள இதர பிரிவினருக்கு சமமான நிலையினை அனைத்துத் துறைகளிலும் அவர்கள் அடைவதை இலக்காகக் கொண்டும், பல்வேறு நலத்திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பிற்படுத்தபட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம், கிராமப்புற பெண்கல்வி ஊக்குவிப்பு திட்டம், விலையில்லா சலவைப்பெட்டி மற்றும் விலையில்லா தையல் இயந்திரம், கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம், பேரறிஞர் அண்ணா விருது , டாம்கோ, டாப்செட்கோ கடன் உதவி திட்டங்கள், இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தில் கோவை மாவட்டத்திற்கு வரப்பெற்ற 17,232 விலையில்லா மிதிவண்டிகளில் 12,128 விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளளன. மீதமுள்ள 5,104 மிதிவண்டிகளை மாணவர்களுக்கு விரைந்து வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது. கிராமப்புற பெண்கல்வி ஊக்குவிப்பு  திட்டத்தில் 3ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த அனைத்து மாணவியர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு தலா ரூ.500வீதம் கல்வி உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தின் மூலம் விலையில்லா தையல் இயந்திரம் மற்றும் விலையில்லா சலவைப்பெட்டிகள் தகுதியுள்ள நபர்கள் (ஆண்டு வருமானம் ரூ.72,000) விண்ணப்பித்து பயன்பெறலாம். தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டு திட்டம் (டாப்செட்கோ) மூலம் விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் 422 பயனாளிகளுக்கு சுய தொழில் செய்ய மற்றும் ஆழ்துளை கிணறு போன்ற திட்டங்களுக்காக ரூ.193.47 இலட்சம் கடன் உதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் டாம்கோ லோன் மூலம் ரூ.1.36கோடி  கடன் உதவி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சார்ந்த 36,764 மாணவர்களுக்கு 2019-20-ம் கல்வியாண்டில் ரூ.21.73கோடி மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்திலேயே கோவை மாவட்டத்தில்தான் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு அதிக அளவிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. என மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குநர், மதிவாணன், தெரிவித்தார்.