பச்சாபாளையம் குட்டையில் தூர்வாரும் பணிகள் துவக்கம்

கோவை பேரூர் பச்சாபாளையம் குட்டையில் தூர்வாரும் பணிகளை நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் எஸ்.பி.அன்பரசன் துவக்கி வைத்தார்.

கோவை மாவட்டத்தில் நீர் மேலாண்மையை அதிகரிக்கும் விதமாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு தன்னார்வ அமைப்பினரும், நகர்புற, ஊரக பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளை தூர் வாருவது போன்ற பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். இதனால் கோவையை சுற்றியுள்ள பல்வேறு முக்கிய குளங்கள் நீர் நிரம்பி நிலத்தடி நீர் மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், கோவை பேரூர் செட்டிபாளையம் கிராமம், பச்சாபாளையம் குட்டையை தனியார் நிறுவனத்துடன் இணைந்து சிறுதுளி அமைப்பினர் தூர்வாரும் பணியை மேற்கொள்ள உள்ளனர். இதற்கான துவக்க விழாவில் நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி.அன்பரசன் குட்டையை தூர் வாரும் பணியை தொடங்கி வைத்தார். இதில் சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், நல்லறம் அறக்கட்டளை தலைமை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், நல்லறம் முருகவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.