பேரூர் படித்துறையில் தர்ப்பணம் செய்ய தடை

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனத்துக்கும் படித்துறையில் தர்ப்பணம் வழிபாட்டுக்கும் இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

புரட்டாசி அமாவாசையன்று இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம். இந்த அமாவாசையின் போது ஏராளமான பொதுமக்கள் தர்ப்பணம் செய்ய வருவார்கள். இந்நிலையில், படித்துறை மற்றும் அம்மன் தோப்பு பகுதிகளில் தர்ப்பணம் வழிபாட்டுக்கு பேரூர் கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பேரூர் நொய்யல் படித்துறையில் ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை தினங்களில் தர்ப்பணம், வழிபாடுக்கு தடை விதிக்கப்பட்டு, தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

இந்த நிலையில், புரட்டாசி அமாவாசை தினமான இன்று படித்துறை மற்றும் அம்மன் தோப்பு பகுதிகளில் தர்ப்பணம் வழிபாட்டுக்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. அத்துடன், கோவிலில் சுவாமி தரிசனத்துக்கும் தடை விதிப்பதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.