எளிமை + திறமை = எஸ்.பி.வேலுமணி

தமிழகத்தின் இரண்டாவது பெரிய தொழில் நகரம், சிறுவாணி தண்ணீர், தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றெல்லாம் பெரிய பெயர் கோவை நகரத்துக்கும், மொத்தமாக கோவை மாவட்டத்துக்கும் உண்டு. அதில் உண்மை இருந்தாலும் அதற்கேற்ற உள்கட்டமைப்போ, வசதிகளோ இருக்கிறதா என்று பார்த்தால் வெகு காலமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். அதற்குக் காரணம், இங்குத் தேவைப்படும் வசதிகளை, வாய்ப்புகளை அரசிடம் எடுத்துச்சொல்லி திட்டங்களைக் கொண்டு வந்து, செயலாக்கம் பெற வைக்கின்ற ஒரு அரசியல் தலைவர் அல்லது பெரிய மனிதர் அல்லது மக்கள் பிரதிநிதி இங்கு இல்லை என்பதை அனைவரும் அறிவார்கள். பல நல்ல அரசியல் தலைவர்கள் இங்கிருந்து உருவாகி இருக்கிறார்கள். ஏன், இங்கிருந்து பலர் அமைச்சர்களாகக்கூட நாட்டுக்கு சேவை புரிந்திருக்கிறார்கள். ஆனாலும் வெகு காலமாக உலக அளவில் அறியப்பட்ட ஒரு நவீன நகரம் முடங்கிப்போய் கிடந்தது என்றே சொல்ல வேண்டும்.
இந்த நிலையில்தான் எஸ்.பி.வேலுமணி இங்கு மக்கள் பிரதிநிதியாக உருவெடுத்து அமைச்சரும் ஆனார். அதன்பிறகுதான் இங்கு திரும்பிய பக்கம் எல்லாம் வளர்ச்சித் திட்டங்கள் உருவாகி செயல்படத் தொடங்கித் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேம்பாலம், அதன்பிறகு இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து வடகோவை மேம்பாலம் என்றிருந்த கோவை தற்போது மளமளவென்று முன்னேறத் தொடங்கியிருக்கின்றது. பல மேம்பாலங்கள், திரும்பிய பக்கம் எல்லாம் சாலை வசதிகள் என்று பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
முக்கியமான பெரிய நெடுஞ்சாலைகளான மேட்டுப்பாளையம் சாலை, பொள்ளாச்சி சாலை ஆகியன புதிய முறையில் அமைக்கப்பட்டு பொலிவு பெற்றன. தொண்டாமுத்தூர் போன்ற பகுதிகளில் சாலை வசதிகள் போதும், போதும் என்ற அளவுக்கு சிறப்பாக செய்து தரப்பட்டன. நொய்யல் ஆற்றுக்கு குறுக்கே பாலம் என்பது அத்தியாவசியமாகிவிட்ட நிலையில் அதில் கவனம் செலுத்தப்பட்டு பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
மெட்ரோ ரயில் அமைப்பதற்கான பணிகள் தொடக்க நிலையில் இருப்பதோடு விமான நிலைய விரிவாக்கப் பணி தொடர்பான சிக்கல்களும் பெருமளவு தீர்க்கப்பட்டுள்ளன.
சிறுதொழில் துறையினரின் கனவான தொழிற்பூங்காவும் அமைக்கப்பட்டிருப்பதோடு, மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டிய பல்வேறு திட்டங்களுக்கு இங்குள்ள தொழில் அமைப்புகளோடு சேர்ந்து வழிநடத்தி குரல்கொடுப்பதும் தொடர்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக எஸ்பி.வேலுமணி அவர்களின் எளிமை அவருடன் பழகியவர்கள் மட்டுமல்லாது, அனைவருக்கும் தெரியுமளவு இங்கு பிரபலியம். யாராக இருந்தாலும், அண்ணா வாங்க என்பதுடன் கட்சியின் அடிமட்டத் தொண்டர் முதல் சாதாரண பொதுமக்கள் வரை அவர்களின் கோரிக்கைகளை ஏற்று, அதனைக் கூடிய விரைவில் தீர்த்து வைப்பது இவரின் தனி பாணியாகத் திகழ்கிறது.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் சிறப்புத் திட்டங்களுக்கான செயலாக்கத்துறை எனும் மாபெரும் பணிச்சுமைக்கிடையே இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தையும் கவனத்தில் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது. இந்த வாரம்கூட மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஒரு பழங்குடி மக்கள் கிராமத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர், டக்கென்று வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு வயலில் இறங்கி பழங்குடிப் பெண்களோடு சேர்ந்து நாற்றுநடத் தொடங்கியது எல்லோரையும் கவருவதாக இருந்தது. அந்த எளிமைதான் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. காண்பதற்கு எளியவராகவும், கடுஞ்சொல் கூறாதவராகவும் இருக்கும் தலைவனிடத்தில்தான் பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி அணுகித் தங்கள் குறைகளைத் தெரிவிக்க முடியும்.
அந்த வகையில் வெகு நாட்களுக்குப்பிறகு பொதுமக்கள் தோழராக, ஒரு அரசியல்வாதி, சட்டமன்ற உறுப்பினர், ஒரு அமைச்சர் கிடைத்திருக்கின்றார் என்றால் அது எஸ்.பி.வேலுமணியைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது. தொடரட்டும் அவரின் மக்கள் பணி என நமது ‘தி கோவை மெயில்’ மனதார வாழ்த்துத் தெதிவிக்கின்றது.