கிருபானந்த வாரியார் சுவாமிகள் பிறந்த தினம்

சுவாரஸ்யமான, எளிய நடையில் ஆன்மிகக் கருத்துகளை பரப்பிய திருமுருக கிருபானந்த வாரியார் 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த காங்கேயநல்லூரில் பிறந்தார்.

இவருடைய தந்தை ஒருமுறை, தான் ஒப்புக்கொண்ட சொற்பொழிவுக்கு செல்ல இயலாததால், இவரை அனுப்பி வைத்தார். மடைதிறந்த வெள்ளமாகப் பெருக்கெடுத்த 18 வயது இளைஞனின் சொல்லாற்றல் அவையோரை மெய்மறக்கச் செய்தது. இவருக்கு முதல் சொற்பொழிவே பேரும் புகழும் பெற்றுத் தந்தது.

குழந்தைகளுக்கு தாயின் பெயரை முதலெழுத்தாகப் போட வேண்டும் என்பதை முதன்முதலாகக் கூறியவர் இவர்தான். எம்.ஜி.ஆருக்கு பொன்மனச் செம்மல் என்ற பட்டத்தை சூட்டியது இவர்தான். ஆன்மிக அறப்பணிகளுக்காக ஏராளமான விருதுகள் பெற்றவர். இவருக்கு சென்னை தமிழிசை மன்றம் இசைப் பேரறிஞர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

வாழ்நாள் முழுவதும் ஆன்மிகச் சொற்பொழிவுகள் மூலம் பக்தி, நன்னெறியை மக்களிடையே வளர்த்தார். சிவனருட்செல்வர், கந்தவேல் கருணை, ராமகாவியம், மகாபாரதம் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட நூல்கள், 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்.

செந்தமிழ்க் கடல், அருள்மொழி அரசு, திருப்புகழ் ஜோதி என்றெல்லாம் போற்றப்பட்ட திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் 87 ஆவது வயதில் (1993) விமானப் பயணத்தின்போது மறைந்தார்.