பேக்கரியில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு

கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட தடை உள்ளதால், கோவையில் பேக்கரி கடையில் விநாயகர் சிலைகளை வைத்து இந்து மக்கள் கட்சியினர் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர்.

கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி இந்து அமைப்புகள் பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை அமைத்து வழிபடுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

இதன் காரணமாக கோவையில் இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் தனியார் இடங்களில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வந்தனர். அந்த வகையில் தேர்முட்டி பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதில் பூசணிக்காயில் கொரோனா வைரஸ்  உருவம் பொறிக்கப்பட்டு அதனை விநாயகர் வேல்கொண்டு வதம் செய்யும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில், தமிழக அரசு மற்றும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி கோவையில் 32 தனியார் இடங்களில் இந்து மக்கள் கட்சி சார்பாக சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும். சிலைகளை மாலை 3 மணி அளவில் கூட்டம் சேராமல் குறைந்த நபர்களைக் கொண்டு  நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.