நான் யாரையும் காதலிக்கவில்லை..

ஒவ்வொரு மனிதனுக¢கும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் பெண்களுக்குனு ஒரு வாழ்க்கை. பெண்களாக பிறந்தால் ஏதோ ஓர் விஷயத்தில் வெற்றி அடைய வேண்டும் என்பதைத் தன் மனதிற்குள் வைத்துக் கொண்டு செயல்படுவர். அவ்வாறான தைரியமான நம்பிக்கை நிறைந்த தொகுப்பாளர் சைலஜா, அழகான மாலை வேளையில் நம் “தி கோவை மெயிலுக்கு” அளித்த சிறப்பு பேட்டி:

ஒரு தொகுப்பாளராக எவ்வாறு உருவானீர்கள்?

நான் தொகுப்பாளராக ஆகணும்னு முடிவு பண்றதுக்கு முன்னாடி நம் நாட்டுல நடக்குற பிரச்னைகளை கவனிக்க ஆரம்பிச்சேன். நான் மக்களுக்கு தெரியாத விஷயங்களை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று முடிவு பண்ணினேன். முதலில் எனக்கு ஒரு வாரம் பயிற்சி கொடுத்தாங்க. அதற்கு அப்புறம் என்னோட வேலை பிடித்து போக எக்ஸ்கியூட்டிவ் ப்ரொடியூசர் ஆக வேலை பார்த்தேன்.

தொகுப்பாளராக இருக்கும் போது மறக்க முடியாத சம்பவம் எது ?

நிறைய இருக்கு. குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. தெலுங்கில் மிகப்பெரிய நடிகர்களை சந்தித் திருக்கிறேன். ஆனால் அவர்கள் மிகவும் எளிமையாக பேசிப் பழகுவார்கள். அதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.

பெண்கள் எந்த அளவுக்கு சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

முதலில் பெண்களிடம் இருக்கும் திறமைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய திறமைகளுக்கு நாம் வழி வகுத்துக் கொடுக்க வேண்டும்.

பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகளை நாம் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். சென்னையில் ஒரு பெண் குழந்தைக்கு நடந்த விஷயம் என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியது. ஒரு குழந்தையிடம்  இப்படி நடந்து கொள்ள எப்படி மனம் வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. சட்டங்களும்,  தண்டனைகளும் கடுமையாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் இதற்கு ஒரு முடிவு கிடைக்கும்.

உங்கள் கல்லூரி காலங்கள் பற்றி சொல்லுங்கள் ?

என் கல்லூரி காலங்களில் எனக்கு மிகவும் பிடித்தது சினிமா தான். ஷாருக்கான் படங்களை மிகவும் ரசித்து பார்ப்பேன். அப்பொழுது நான் முடிவு பண்ணினேன் சினிமா தொகுப்பாளர் ஆக வேண்டும் என்று. அதுவும் நல்லபடியாக நடந்தது.

மீடியா துறையில் நீங்க கத்துக்கிட்ட விஷயங்கள் என்னென்ன?

நான் தொகுப்பாளராக ஆன பிறகு நிறைய விஷயம் கத்துகிட்டேன். குறிப்பிட்டு சொல்லனும்னா தொழில்முறை சார்ந்து இருக்க வேண்டும். மேலும் பல துறைகளைச் சார்ந்தவர்களை சந்திப்பதற்கு நல்ல வாய்ப்புகளும் கிடைத்தன.

லவ் மேரேஜ்? அரேஞ்ச் மேரேஜ்?

எனக்குன்னு சில கடமைகள் இருக்கு. ஒரு பெண்ணா சாதிக்கணும்னு நினைக்கிறேன். இது வரைக்கும் நான் யாரையும் லவ் பண்ணல. கண்டிப்பா வீட்டுல பாக்குற பையனத்தான் கல்யாணம் பண்ணுவேன்.

ஒரு பெண்ணா நீங்க என்ன சாதிக்கணும்னு நினைக்கிறீங்க?

என்னை ஒரு தொகுப்பாளினியாக எல்லோரும் பார்த்திருப்பீர்கள். ஆனால் எனக்கு சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று ஆசை. அதற்கு உண்டான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன். கண்டிப்பாக நான் சாதிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

உலகத்துலேயே எந்த விஷயம் அழகானது என்று நினைக்கிறீர்கள்?

நாம மனிதனா பிறந்ததே அழகான விஷயம்தான். நம்ம வாழ்க்கையில் நிறைய அழகான விஷயம் இருக்கு. அதை நாம யாரும் பார்க்கிறது இல்லை. நாம எப்பவும் நமக்கு நடக்குற கஷ்டத்தை மட்டும் யோசித்து வாழ்க்கையில் தோல்வி அடைகிறோம். நான் மீடியா துறையில் இருக்கும்போது எனக்கு நல்ல மரியாதை கிடைக்கிறது. எல்லோரும் ஆதரவு கொடுத்து என்னுடைய திறமையை எனக்கு புரிய வைத்தார்கள் என்றுகூட சொல்லலாம். எப்பவும் நல்லது மட்டும் யோசிங்க. நல்லதே நடக்கும்.

சைலஜாவின் புது முயற்சிகள் எதுவாக இருக்கும்?

புது முயற்சிகள்னு எதுவும் கிடையாது. நாம் பார்க்கும் ஒவ்வொரு வேலை யும் ரசித்து செய்ய வேண்டும். இந்த இதழைப் படித்துக் கொண்டு இருக்கும் வாசகர்களுக்கும் நான் கூறுவது ஒரே விஷயம் தான். எப்பவும் நாம தோற்று போய் விட்டோம் என்று நினைக்காமல் நீங்க நினைச்ச லட்சியத்தை அடையணும்னு யோசிங்கனு சொல்லிக்கிறேன். மனதில் உங்கள் லட்சியத்தை வையுங்கள், வெற்றி உங்களைத் தேடி வரும். நன்றி, வணக்கம்.

– பாண்டியராஜ்