அதிகம் பாதித்த பகுதியாக மாறும் பீளமேடு

கோவையில் கடந்த ஒரு மாதம் இறுதிவரை புதிதாக ஒரு தொற்று கூட இல்லாமல் இருந்தது. இந்நிலையில் சென்னையில் ஊரடங்கு அறிவித்ததன் மூலம் கோவைக்கு விமானம் ரயில், கார் மற்றும் இருசக்கர வாகனம் மூலம் பலர் வந்ததை அடுத்து இங்கு தொற்று அதிகரித்தது. இதனால் தற்பொழுது கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை தற்பொழுது 400க்கும் மேல் சென்றுள்ளது.

இதில் குறிப்பாக கடந்த சிலநாட்களாக 30 முதல் 40க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்ததால் இந்த தொற்றை கண்டறிய முடிந்துள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தற்பொழுது விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால், கோவை மாநகருக்குள் பொதுமக்கள் அத்தியாவசியமின்றி பொதுவெளிகளுக்கு வருவதால் தான் தொற்று வேகமாக பரவுகிறது. இந்நிலையில் பீளமேடு பகுதியில் உள்ள பட்டு விற்பனை நிலையத்தில் வேலை செய்த ஒருவர் மூலம் 19 பேருக்கு தொற்று பரவியுள்ளது. இதனால் அப்பகுதி தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக (கிளஸ்டர்) அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு ஒரே இடத்தில் அதிகமான தொற்று உறுதிசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.