பாரம்பரிய இயற்கை வாழ்வியலோடு இணைந்து வாழ்வோம்

– இந்திய நிதி ஆயோக் தலைவர் ராஜூவ் குமார்

கொரோனா எனும் கொடிய வைரஸ் கிருமி உலகம் முழுவதையும் அச்சத்தில் ஆழ்த்தி அதிலிருந்து இன்றும் மீள முடியாமல் திகைக்க வைத்துகொண்டிருகிறது.

உலக அளவில் தற்பொழுது வரை கொரோனாவுக்கு ஒரு நிரந்தர தடுப்பு மருந்து கண்டறியபடவில்லை. இருப்பினும் இதில் பலர் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்கிறார்கள் என்றார் அதற்கு இயற்கை உணவு வகைகள் தான் காரணம் என்று பலர் கூறுகிறார்கள். மேலும் இயற்கை உணவு எடுத்து கொண்டால் இதிலிருந்து தற்காலிகமாக பாதுகாக்க முடியும் என்றும் சிலர் கூறுகிறார்கள்.

இதனால் பலர் இயற்கை விவசாயத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர். ஏற்கனவே இதை பற்றி வலியுறுத்தி வந்த இயற்கை மற்றும் சமூக நலனில் அக்கறை கொண்டவர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இயற்கை விவசாயத்தின் அவசியம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ரசாயன உரங்களாலும் பூச்சிக் கொல்லிகளாலும் உணவுப் பொருள்களில் நச்சுத்தன்மை உருவாகி, மக்களின் உடல் நலனை பாதிப்பதாகவும், இயற்கை இடுபொருள்களை மட்டுமே பயன்படுத்தி விவசாயம் செய்தால்தான் ஆரோக்கியமான உணவை உற்பத்தி செய்ய முடியும் என இயற்கை விவசாய ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில்தான், கொரோனா தொடர்பாக, சர்வதேச அளவில் நடைபெற்ற காணொலி கலந்தாய்வில், இந்திய அரசின் நிதி ஆயோக், இயற்கை விவசாயத்தின் தேவை குறித்து தனது கருத்துகளை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. இது இயற்கை விவசாய ஆர்வலர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இயற்கை விவசாயத்தை வளர்த்தெடுக்க, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், இயற்கை வேளாண் வித்தகர் சுபாஷ் பாலேக்கர் உள்ளிட்ட பலர் பெரும் பங்காற்றினார்கள். மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கையை மீட்டெடுக்கவும், விவசாயிகளை நஷ்டத்திலிருந்து காப்பாற்றவும் மத்திய மாநில அரசுகள், இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டுமென பல தரப்பிலிருந்தும் குரல்கள் ஒலித்து வருகிறது. இந்த நிலையில்தான் கொரோனா வைரஸ் பரவல் குறித்தும், நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்துவதற்கான உணவு குறித்தும் விவாதித்தப்பதற்காக, இந்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பானது, சர்வதேச அளவிலான காணொலி கலந்தாய்வு கூட்டத்தை நடத்தியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளும், ஐ.நா அமைப்பினரும் கலந்துகொண்டார்கள்.

இதில் இந்திய நிதி ஆயோக் தலைவர் ராஜூவ் குமார் பேசுகையில், “இந்த இக்கட்டான நேரத்தில் இயற்கையோடு இணைத்து வாழ்வதே இந்த உலகை பாதுகாக்கும். இந்திய மக்கள், பாரம்பரியமான இயற்கை வாழ்வியலோடு இணைந்து வாழ, முயற்சி செய்ய வேண்டும். பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரங்கள் தவிர்த்து உணவு உற்பத்தி மேற்கொள்ள வேண்டும். இந்த இக்கட்டான நேரத்தில் உலக நாடுகள் பலவும் முழுவதுமே இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கத் தொடங்கிவிட்டன. இந்தியாவும் இயற்கை விவசாயத்தை தீவிரமாக முன்னெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. வளமான சமுதாயத்தை வளர்த்தெடுக்க, இயற்கை இணைந்து வாழ்தலே சிறந்த வழி” என தெரிவித்துள்ளார்.